பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீரா மிதுனின் நண்பர் அபிஷேக்குக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர், சர்ச்சையாக பேசி அடிக்கடி வழக்குகளில் சிக்கிக்கொள்வார். முக்கியமாக, கடந்த மாதம் பட்டியலினத்தவர்கள் குறித்து மிகவும் சர்ச்சையாக பேசினார். இதுதொடர்பாக விசிகவின் வன்னியரசு புகார் அளித்த நிலையில், அவர் மீது தடுப்புச் சட்டம் உள்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மீரா மிதுன் போலீசாருக்கு சவால் விட்டார். இதனைத் தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் 14ஆம் தேதி கேரளாவில் சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரின் நண்பர் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்த போலீசார், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், நட்சத்திர ஹோட்டல் ஊழியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். அப்போது அவர், தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல்துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் புகார் கூறினார். மேலும், தன் மீது வேண்டுமென்றே எந்த காரணமும் இல்லாமல் போலீசார் அடுத்தடுத்து வழக்குகள் போடுவதாகவும், தனக்கு ஜாமீனே கிடைக்கக் கூடாது என்று செயல்படுவதாகவும் கூறினார். உங்கள் மீது காரணத்தோடுதான் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.
மேலும், வழக்குகள் குறித்து போலீசார் தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன் சார்பாக வாதா வக்கீல் வரவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக போலீசார், மீராமிதுன் வக்கிலீடம் தகவல் தெரிவித்ததாக கூறினர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.மீரா மிதுன் மீது போடப்பட்ட மொத்த 4 வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களை இழிவாக பேசிய வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், ‘என்னைப் பற்றி அவதூறாக
செய்தி பரப்பியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின மக்களை பற்றி பேசிவிட்டேன். நான் பேசியது தவறுதான். ஆனால், நான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட்டியலின மக்களோடு நான் நட்புடன் இருக்கிறேன். மேலும் பல படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் என்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: தோற்றது கொரோனா... தொடங்கியது ஐபிஎல்... தடுப்பூசி தரப்போவது டெல்லியா... ஐதராபாத்தா?