தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் தேர்தல் நடைபெறாத மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி இடங்களில் வேட்பாளர்கள் இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் கடந்த ஜூன் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் 32 பதவிகளுக்கு இந்த உள்ளாட்சித் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, ஊராட்சி மன்ற தலைவர் பதவி, வார்டு உறுப்பினர் பதவி உள்ளிட்ட காலியாக உள்ள 32 பதவி இடங்களுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.



 

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை முதல் தொடங்கி இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி, ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர் என 60 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக திருவாரூர் மாவட்ட ஊராட்சி 11வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ரமேஷ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், திமுகவுடன் கூட்டணியில் உள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வீரமணி என்பவரும் அதே பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.



ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகளும் ஒரு பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பதால் கூட்டணி கட்சியினர் இடையே கடுமையான போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டு கட்சியினரும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு இந்த வார்டில் பிரகாசமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் திருவாரூர் பள்ளிவாரமங்களம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு இன்று காலை அதிமுக சார்பில் சாவித்திரி என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் மணிகண்டன், மற்றும் செந்தில் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பேரணியாக வந்து திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் துணை அலுவலரிடம் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளாக உள்ள நிலையில் காலை முதல் அனைத்து கட்சியை சேர்ந்த நபர்கள் தொடர்ந்து தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் அனைவரும் தங்களது வேட்புமனுக்களை திரும்ப பெற 25-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்பது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.