டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2001ம் ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்ற அதே நாளில், நேற்று மக்களவைக்குள் 2 இளைஞர்கள் புகுந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்:
இந்த நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது. நேற்று இளைஞர் அத்துமீறி மக்களவைக்குள் புகுந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இன்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு அனுமதிக்காத காரணத்தால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 எம்.பி.க்கள் உள்பட எதிர்க்கட்சியைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள் இந்த கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் கண்டனம்:
15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில், “ தி.மு.க. எம்.பி. உள்பட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது. இது நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வை குழிதோண்டி புதைக்கிறது.
பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை கண்டிக்கத்தக்கது. எம்.பி.க்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவது நமது நாடாளுமன்றத்தில் புதிய விதிமுறையா? நமது ஜனநாயக கோவிலில் ஒரு பெரிய பாதுகாப்பு மீறலுக்கு பதில் தேடும் மக்கள் பிரதிநிதிகள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்?
15 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். நாடாளுமன்றம் விவாத மேடையாக இருக்க வேண்டுமே தவிர, எதிர்க்கட்சிகளின் வாயடைக்க வைக்கக்கூடாது.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
எம்.பி.க்கள் பட்டியல்:
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 15 எம்.பி.க்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, மாணிக் தாகூர், சு.வெங்கடேசன், பார்த்திபன், ஜோதிமணி, நடராசன் ஆகியோரும் அடங்குவார்கள். ராஜ்ய சபா உறுப்பினரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரிக் ஓ பிரையன், கேரளாவின் திரிச்சூர் தொகுதி எம்.பி.யான காங்கிரசைச் சேர்ந்த பிரதாபன், எர்ணாகுளம் தொகுதி எம்.பி.யான காங்கிரசைச் சேர்ந்த ஹிபி ஈடன், கேரளாவின் ஆலத்தூர் தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் எம்.பி. ரம்யா ஹரிதாஸ், பாலககாடு மக்களவைத் தொகுதி உறுப்பினரான காங்கிரஸ் எம்.பி.யான வி.கே.ஸ்ரீகண்டன், சாலக்குடி தொகுதி எம்.பி.யான பென்னி பெஹனான், பிகாரின் கிருஷ்ணகஞ்ச் தொகுதி எம்.பி. முகமது ஜாவித் ( காங்கிரஸ்) ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: MP Suspension: காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உட்பட 15 பேர் சஸ்பெண்ட்.. சபாநாயகர் அதிரடி..
மேலும் படிக்க: CM Letter: மிக்ஜாம் புயல் பாதிப்பு: கடன் தவணையை நீட்டிச்சு அறிவிங்க.. நிதியமைச்சருக்கு முதல்வர் கடிதம்..