நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர் நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட 15 எம்.பிக்கள் நாடாளுமன்ற நடப்புக்கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கம்போல் அவை இயங்கி வந்ததது. இந்நிலையில் நேற்று மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து 2 பேர் பார்வையளர்கள் மாடத்தில் இருந்து கிழே குதித்து, கண்ணீர் புகை குண்டு வீசும் குப்பிகளை வீசினர். இதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியானது. பின் சுற்றியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு பேரையும் பிடித்து பாதுகாவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் நாடாளுமன்ற வாசலிலும் இருபெண்கள் வண்ண புகையை வெளிப்படுத்தும் குப்பிகளை கொண்டு போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவையில் விவாதிக்கக்கோரி காங்கிரஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், விதி 267-ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்த விவாதிக்க காங்கிரஸ் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இன்று பலத்த பாதுகப்புடன் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியது.
அப்போது நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அவையில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். அமலியில் ஈடுபட்ட 14 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் என 15 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற நடப்புக்கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இடைநீக்கம் தொடர்பாக பேசிய எம்.பி கனிமொழி, “ நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த ஒரண்டு நபர்கள் உள்ளே வருவதற்கான அனுமதி சீட்டு வழங்கியுள்ளார். ஆனால் இதுவரை அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் மஹுவா மொயித்ரா வழக்கில் முழுமையான விசாரணை கூட நடத்தாமல் அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காத போது, எங்களுக்கு வேறு வழியில்லை. அமலியில் ஈடுபடுவது தான் ஒரே வழி” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எம்.பி. ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், “ அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்கவே இந்த இடைநீக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளை பயமுறுத்த நினைக்கிறார்கள். அச்சத்தை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க முடியாது. நேற்றைய பாதுகாப்பு தோல்வி குறித்து உள்துறை அமைச்சரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அறிக்கை கோரினால், அதில் என்ன தவறு? உள்துறை அமைச்சர் இதற்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். நேற்று பாராளுமன்றத்தில் நுழைந்த இரண்டு பேரும் முஸ்லிம்களாக இருந்திருந்தால் அல்லது காங்கிரஸாக இருந்திருந்தால், அப்போது அவர்களது நடவடிக்கை வேறு மாதிரி இருந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.