கரூர் மாநகராட்சியில் குறைந்த காலத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளையும், வாடகை பாக்கியையும் வசூலிக்க அதிரடி காட்டிய ஆணையர் சரவண குமார் இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 


 




கரூர் மாநகராட்சியின் ஆணையராக சரவணகுமார் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றது முதல் நாளிலிருந்து சாலையோர கடைகளை ஒழுங்கு படுத்துவது, ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்வது, காமராஜ் மார்கெட்டில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தூர் வாருவது, பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ள கடைகளை மூடுவது போன்ற நடவடிக்கைகளால் அதிரடி காட்டி வந்தார். 


 




கடைசியாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜவஹர் பஜார் கடை வீதியில் மாநகராட்சி கடைகளுக்கு வாடகை தராத கடைகளுக்கு சீல் வைத்ததுடன், அதன் மின் இணைப்பை துண்டித்ததுடன், சிதிலமடைந்த கடைகளையும், ஆக்கிரமிப்புகளையும் பொக்லைன் மூலம் இடித்து அகற்றினார்.




இந்த நிலையில், அந்த ஆணையர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  ஈரோடு மாநகராட்சியின் துணை ஆணையர் கே.எம்.சுதா கரூர் மாநகராட்சி ஆணையராக பதவி உயர்வு பெற்று கரூர் மாநகராட்சிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சியில் குறைந்த காலத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகளையும், வாடகை பாக்கியையும் வசூலிக்க அதிரடி காட்டிய ஆணையர் சரவண குமார் இடமாற்றம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.