சென்னையில் ஆகஸ்ட் 3-ந் தேதி முதல்  12-ந் தேதி வரை சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடைசியாக 2007ம் ஆண்டு சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, எழும்பூரில் உள்ள ஹோட்டல் ராடிசனில் ஹாக்கி தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது.


ஆசிய ஹாக்கி டிராபி:


இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,


“ ஒரு காலத்தில் ஹாக்கியின் தலைநகராக விளங்கிய சென்னையில் 2023ம் ஆண்டுக்கான ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. தென்னிந்தியாவின் விளையாட்டு தலைநகரமான சென்னையில் பல புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ். கார்த்தி உள்பட இந்திய அணியில் சமீபகாலமாக துடிப்பான இளைஞர்கள் பலர் வருவதால் தமிழ்நாட்டில் விளையாட்டு புத்துயிர் பெறுவதை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஹீரோ ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இங்கு நடத்துவது இப்பகுதியில் விளையாட்டுக்கு மேலும் புத்துயிர் அளிக்கும். மேலும் ஆசியாவின் சிறந்த அணிகள் விளையாடுவதை பார்க்கின்ற வீரர்கள், இளைஞர்கள் அனைவரிடமும் விளையாட்டு மீதான ஆர்வத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வாழ்க்கையில் ஹாக்கி விளையாட்டை தேர்வு செய்ய வாய்ப்பாக அமையும். தமிழநாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு இந்த ஆசிய ஹாக்கி கோப்பை தொடரை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்யும்.”


இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.


ஹாக்கி ஆசிய சாம்பியன்ஷிப்:


இந்தியாவில் கடைசியாக ஆசிய கோப்பை 2007ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடத்தப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறும் ஆசிய ஹாக்கி தொடரை நடத்தும் வாய்ப்பு மீண்டும் சென்னைக்கே கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், ஹாக்கி இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளர் போலாநாத்சிங் நிருபர்களிடம் கூறியதாவது, “ஹாக்கி இந்தியாவின் அமைப்பாளர்கள் சென்னையில் போட்டி நடைபெறும் இடத்தினை பார்வையிட்டு நடைபெற்று வருகின்ற முன்னேற்பாடு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் பல்வேறு முக்கிய தேசிய அளவிலான ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்தியாவில் உள்ள பல்வேறு வயது பிரிவுகளில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. எடுத்துச் செல்ல முனைப்புடன் உள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.


ஆசிய ஹாக்கி அணிகள்:


ஆசிய ஹாக்கி பட்டத்தை இந்திய  ஆண்கள் அணி  3 முறை வென்றுள்ளது. கடைசியாக 2017ம் ஆண்டு இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 11 முறை நடந்த ஆசிய ஹாக்கி தொடரில் 8 முறை இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதிகபட்சமாக தென்கொரியா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் தலா 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஆசிய சாம்பியன் ஹாக்கி தொடரில் தென்கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Amarnath Yatra 2023 Registration: அமர்நாத் யாத்திரை போக ஆசையா.. எங்கே, எப்படி பதிவு செய்ய வேண்டும்.. முழு விவரம் தருகிறது ஏபிபி நாடு


மேலும் படிக்க: அதிகரிக்கும் பருத்தி சாகுபடி; உரம், பூச்சி மருந்துகளை மானிய விலையில் வழங்க திருவாரூர் விவசாயிகள் கோரிக்கை