அமர்நாத் யாத்திரைக்கு செல்ல விரும்புபவர்கள் எங்கே, எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பான தகவலை இந்த தொகுப்பில் அறியலாம். முன்னதாக, ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை புனித யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


துணை நிலை ஆளுநர் உறுதி:


தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் புனித யாத்திரை தொடர்பாக ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் 44-வது ஆலோசனை கூட்டம், காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் ராஜ்பவனில் நடந்தது. அதன் முடிவில் நடப்பாண்டிற்கான அமர்நாத் யாத்திரையை, ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பேசிய மனோஜ் சின்ஹா ”சுமுகமான அமர்நாத் யாத்திரைக்கு முன்னுரிமை அளிக்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூறியுள்ளனர். இந்த யாத்திரையில் பக்தர்களுக்கு மிகச் சிறந்த சுகாதார மற்றும் தங்குமிடம், மின்சாரம், பாதுகாப்பு ஆகிய அத்தியாவசிய வசதிகளை பெறுவர்” என உறுதியளித்தார்.


முன்பதிவு தொடக்கம்:


மொத்தம் 62 நாட்கள் நடைபெற உள்ள இந்த யாத்திரை, அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மற்றும் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் ஆகிய இரண்டு பாதைகளிலும் ஒரே நேரத்தில் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு அமர்நாத் யாத்திரைக்கு இன்று முதல் பக்தர்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


யார் யாரெல்லாம் யாத்திரை செல்லலாம்?


அமர்நாத் யாத்திரை செல்ல விருப்பமுள்ளவர்கள்  www.jksasb.nic.in. எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம். 13 வயது முதல் 70 வரையிலான எந்தவொரு தனிநபரும் இந்த யாத்திரியை மேற்கொள்ளலாம். அதேநேரம், 6 வாரம் மற்றும் அதை தாண்டிய கருவுற்ற பெண்கள் யாரும் யாத்திரை மேற்கொள்ள அனுமதி இல்லை. 


முன்பதிவு செய்வது எப்படி?


படி-1: மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீ அமர்நாத்ஜி ஆலய வாரியத்தின் (SASB) அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்


படி-2: ”ஆன்லைன் சர்வீஸ்” எனும் ஆப்ஷனை தொட்டதும் திறக்கும் மூன்று ஆப்ஷன்களில் ”ரிஜிஸ்டர்” எனும் ஆப்ஷனை தொடவும்


படி-3: தற்போது புதிய பக்கத்திற்கு செல்லும்


படி-4: அங்கு தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்துவிட்டு சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.


படி-5:  பயனாளரின் செல்போன் எண்ணிற்கு வரும் ”ஓடிபி” எண்ணை பதிவு செய்து முன்பதிவை உறுதி செய்யவும்


படிவு-6: மனு பரிசீலனை செய்யப்பட்டதும் பயனாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்


படி-7: பயணத்திற்கான கட்டணத்தை செலுத்தவும்


படி-8: முன்பதிவு உறுதி செய்யப்பட்டதற்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் 


இந்த முன்பதிவானது பஞ்சாப் நேஷனல் வங்கி, எஸ்பிஐ, ஜம்மு & காஷ்மீர் வங்கி மற்றும் எஸ் பேங்க் ஆகிய வங்கிகளின் கிளைகளில் நாடு முழுவதும் செய்து தரப்படும். அதோடு, SASB எனும் செயலி மூலமாகவும் இந்த ஆன்லைன் முன்பதிவை மேற்கொள்ளலாம்.


கட்டண விவரம்:


குறிப்பிட்ட வங்கிகள் மூலமாக அமர்நாத் யாத்திரைக்கு முன்பதிவு செய்ய 120 ரூபாய் சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதோடு,  யாத்திரைக்கு இந்தியர்களுக்கு 220 ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன்பதிவு செய்ய 1,520 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும்.