காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆண்டுதோறும் மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் திறக்கப்படாததன் காரணத்தினாலும் இயற்கை பாதிப்பின் காரணத்தினாலும் மூன்று போகம் என்பது ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படுவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மீண்டும் 3 போகம் நெல் சாகுபடி மற்றும் இதர சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு அறுவடை நேரத்தில் மழை மற்றும் இயற்கை சீற்றத்தின் காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு கோடை சாகுபடி கை கொடுக்கும் அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 40,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் வருடந்தோறும் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருத்தி பஞ்சு கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆர்வமுடன் பருத்தி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16,261 ஹெக்டேர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது.பருத்தி சாகுபடிக்கு சாதகமான சீதோசன நிலை நிலவியதால் விளைச்சல் அதிகரித்தது.அதற்கு ஏற்ற வகையில் பருத்தி பஞ்சின் கொள்முதல் விளையும் அதிகரித்தது. இதனால் இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 16,500 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 500 ஹெக்டேர் வரை பருத்தி சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பருத்தி சாகுபடியினை சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தடையின்றி சொட்டு நீர் பாசனம் நடைபெறும் வகையில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் பருத்தி சாகுபடி பயிர்கள் 20 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது. இப்பயிர் நன்கு வளர உரம் தேவைப்படுகிறது. அதுபோல் பருத்தி செடிகளில் மாவு பூச்சி, அந்து பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் பூச்சிகளிடமிருந்து பருத்தி பயிர்களை காப்பாற்றும் வகையில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அல்லது வேளாண் அலுவலகங்கள் மூலம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பருத்தி பஞ்சுகளை கொள்முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்திலிருந்து முகவர்களை, மாவட்டங்களுக்கு நேரடியாக வரவழைத்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.