தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் சேகர்பாபு. அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
கோயில் பராமரிப்பு பணிகள்:
“தி.மு.க ஆட்சியில் 6 ராஜ கோபுரங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 13 திருத்தேர்கள் மராமத்து பணிகளுக்கு ரூ.7 கோடியே 58 லட்ச ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்கள் புதுப்பிக்கப்பட்டு தற்போது வீதி உலா நடைபெற்று வருகிறது. சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயிலுக்கு ரூ.85 லட்சம் செலவில் 5 இராஜகோபுரங்கள் கட்டுவதற்கும், ரூ.53 லட்சத்தில் புதிய மரத்தேர், அன்னதான கூடம் ரூ. 49 லட்சம் செலவில் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
1093 கோயில்களுக்கு குடமுழுக்கு:
தி.மு.க ஆட்சியில் இதுவரை 1093 கோயிலுக்குக் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. சுமார் 5472 கோடி ரூபாய் மதிப்புள்ள 5820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது. அறநிலையத்துறையில் இதுவரை அமைந்த ஆட்சியில் இல்லாத வகையில் தற்போதைய ஆட்சியில் திருப்பணிகள், ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.600 கோடி உபதாரர்களிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது.
தமிழக கவர்னரை பொறுத்தளவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட முடியுமோ அப்படி எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்தினுடைய கவர்னராக செயல்படவில்லை.
ஆளுநரின் தொந்தரவு:
ஆர்.எஸ்.எஸ்.-ன் தமிழ்நாடு மாநில தலைவராகவும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராகவும், அவர்களுடைய கொள்கைகளைப் பின்பற்றி இந்த ஆட்சிக்கு எப்படி எல்லாம் தொந்தரவு தர முடியுமோ அந்த வகையில் தொந்தரவு கொடுத்து, மனிதனை பிரித்தாள்வது, சாதி, மத துவேஷங்களை இடுவது போன்றவற்றை தான் ஆளுநர் தன்னுடைய பணியாக மேற்கொண்டு இருக்கின்றார். ஆளுநருக்குண்டான பணிகளிலிருந்து அவர் தவறிவிட்டு, இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
சிறையில் அப்பாவிகள்:
பொன்மாணிக்கவேல் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளால் பல அப்பாவிகள் சிறை சென்றார்கள். மீடியாவின் விளம்பரத்திற்காக இது போன்ற தவறான செய்திகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பணியில் இல்லாத காலத்திலும் அவர் மீது சி.பி.ஐ. முதற்கொண்டு நீதிமன்ற வழக்குகள் நிறைய இருக்கின்றன. தன்னுடைய விளம்பரத்திற்காக துறையின்மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு இருக்கின்றார். அவர் குற்றம் அல்லது தவறுகளை குறிப்பிட்டு சொன்னால் நிச்சயமாக அதற்கு விளக்கம் தரவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க: ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய நபரால் பரபரப்பு.. நடந்தது என்ன?
மேலும் படிக்க: DA: அதிரடி அறிவிப்பு: ஆசிரியர்கள் உள்ளிட்ட தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!