சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் இருந்து வெளிய வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் மாளிகை முகப்பு வாயிலில் கருக்கா வினோத் என்ற ரவுடி பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டு வீசியபோது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் கருக்கா வினோத்தை சுற்றிவலைத்து கைது செய்தனர்.
நடந்தது என்ன?
சைதாப்பேட்டை நீதிமன்றம் வழியாக ராஜபவன் முன்னோக்கி சென்ற மர்ம நபர் ஒருவர், அண்ணா பல்கலைக்கழகம் திரும்பும் சந்திப்பில் நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களிலும் தீயை பற்ற வைத்து ஒரு பாட்டிலை ராஜ்பவன் பிரதான வாயிலில் முன்பாக வீசியுள்ளார். மேலும், அவர் கையில் இருந்த மூன்று பாட்டில்களில் ஒன்று அந்த நபர் அருகே கீழே விழுந்து உடைந்துள்ளது.
மேலும் கையில் இருந்த இரண்டு பாட்டில்களை தீயை பற்ற வைத்துக்கொண்டு நின்றவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்தனர். அந்த நபரை கிண்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த கருக்கா வினோத் எனத் தெரியவந்தது. இவர், ஏற்கனவே பல குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி:
பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் கண்டு வீசிய வழக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், மூன்று நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார். இது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தான் சிறையில் இருந்து வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கருக்க வினோத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காவல்துறை நடத்திய விசாரணையின்போது, நீட் தேர்வு தேவையில்லை என்றும் இதற்காக பெட்ரோல் குண்டுகளுடன் ஆளுநரை சந்திக்க வந்தேன்" என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குற்றவாளி கருக்கா வினோத் மீது வழக்குப்பதிவு செய்யும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்துள்ள காவல்துறை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் தற்போது ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
ராஜ்பவன் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு என்றும் முக்கியமற்ற விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.