சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் திறனாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன்
பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,
“ வெளிமாநில தொழிலாளர்களையும் நமது தொழிலாளர்களுக்கு சரிசமமாக கருதி அவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய அனைத்து தொழிலாளர் நல வசதிகளான குறைந்தபட்ச கூலி, 8 மணி நேர பணி, மிகை நேரத்துக்கான இரட்டிப்பு ஊதியம், உரிய காலத்தில் சம்பளம் வழங்கப்படுதல் மற்றும் ஓய்வறை, கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தருதல் ஆகியவற்றை ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு பாலியல் வன்கொடுமை ஏதும் நிகழாத வகையில் உரிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்படுத்திட வேண்டும். தொழிற்சாலைகளில் குழந்தைகள் காப்பக வசதி, கேண்டீனில் தரமான உணவு வழங்குவதை கண்காணிப்பதுடன், குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் முறையினை ஒழிக்க பாடுபட வேண்டும்.
மரண விபத்து நிகழும்போது அலுவர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நிர்வாகத்தினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மரணமடைந்ததொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை உரிய நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட காலமாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த தகுந்த வழிவகை செய்யப்பட வேண்டும்.
நீதிமன்றங்களில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து நடத்தி வழக்கினை வெற்றிகரமாக முடித்திட அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பெறப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். “
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டில் முக்கிய தொழில் நகரங்களான சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல நகரங்களிலும் இன்று கட்டுமான பணிகளில் வெளிமாநில தொழிலாளர்கள்தான் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள், கடைகள் மற்றும் உணவகங்களில் பணியாளர்களாக வடமாநில தொழிலாளர்களே மிகுந்த அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Today Headlines : பொங்கல் பஸ்...இன்றும் ஆதார் இணைப்பு... ஆஸி., வெற்றி... இன்னும் பல செய்திகள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்