மக்களவை வரலாற்றின் மூன்றாவது முறையாக இன்று நட்சத்திர குறியிட்ட (Starred Questions) 20 கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த கேள்விகளை எழுப்பிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தை புறக்கணித்த சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது. 


நட்சத்திரக் குறியிட்ட கேள்வி என்றால், அமைச்சர்கள் வாய்மொழி- பதில அளிக்க வேண்டும். இதற்கு, துணைக் கேள்விகளும் கேட்க அனுமதி உண்டு. பொதுவாக, நாடாளுமன்ற விதிமுறைகளின் படி, பதில்களைப் பெற, ஒரு உறுப்பினர் 10 நாட்களுக்கு முன்பே கேள்விகளைப் பதிவு செய்ய வேண்டும். பதில் அளிக்கப்படும் நாளன்று  ஓவ்வொரு உறுப்பினரும்  எழுந்து நின்று அமைச்சரிடம் கேள்வியை கேட்க வேண்டும்.         


பாஜக தலைமைக் கொறடா ராகேஷ் சிங் , பெங்களூர் (தெற்கு) எம்பி தேஜஸ்வி சூர்யா, பஷ்சிம் சம்பாரண் (பீகார்) உறுப்பினர் சஞ்சய் ஜெய்ஸ்வால், கௌசாம்பி (உத்தர பிரதேசம்) எம்பி வினோத் குமார், பலூர்காட் (மேற்கு வங்கம்) உறுப்பினரும்  மாநிலக் கட்சித் தலைவருமான சுகந்தா மஜும்தார் உள்ளிட்ட 9 உறுப்பினர்கள்    கேள்வி நேரத்தின் போது தங்கள் கேள்விகளை எழுப்ப வில்லை. நாடாளுமன்றத்தின் மரபையும், கண்ணியத்தையும் கேள்வி கேட்பதாக அமைந்ததாக காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.   


மக்களவை நடைமுறை விதிகளின் படி, ஓவ்வொரு அமர்வின் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரமாக செயல்படுகிறது. அமர்வின் அனைத்து நாட்களிலும் நடைபெறும் இந்த கேள்வி நேரத்தில்,  நாட்டு நலன் தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு  அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும். கேள்வி நேரம் நாடாளுமன்றத்தின் முக்கிய அங்கமாக உள்ளது. நாட்டில் தொலைநோக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகவும், ஜனநாயகத்தில் ஆக்கப்பூர்வ விவாதங்களை உருவாக்கவும் பயன்படுகிறது.



     


முன்னதாக, நடைபெற்ற நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய மோடி, " பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பும்  மிக  முக்கியமானது. மாறுங்கள், இல்லையேல், காலப்போக்கில் நடக்கும் மாற்றத்துக்குத் தயாராகுங்கள்" என்று எச்சரித்தார். 


மேலும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2021 தொடங்குவதையொட்டி அவர்  வெளியிட்ட அறிக்கையில், " இளைய தலைமுறையினரை ஈர்க்கும் வகையில், நமது நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும். அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும், திறந்த மனதுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது.  அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது.  நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுவதையும், அவையில் அமைதி நிலவ வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.