ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதை விசாரித்து வந்தனர்.



விசாரணையின் முடிவில் அவர் மீது இரு புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயநல்லதம்பி என்பவர், கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியிடம், பலருக்கு ஆவினில் வேலை வாங்கித் தருவதாக தன்னிடம் அவர் கூறியதாகவும், அதன் அடிப்படையில் பலரிடமிருந்து பணம் பெற்று ராஜேந்திரபாலாஜியிடம் கொடுத்ததாகவும்,  'நான் பலரிடம் வாங்கி கொடுத்த 3 கோடி ரூபாயை ராஜேந்திர பாலாஜி திரும்பி தரவில்லை' என, விஜயநல்லதம்பி, விருதுநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என ராஜேந்திர பாலாஜி முன் ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 



இதனையடுத்து ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகிவிட்டார் எனவும் அவரை தனிப்படை கடல் பகுதியில் தேடிக்கொண்டிருப்பதாக  தகவல் வெளியானது. ஆனால் அவர் தலைமறைவாகவில்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ஜெயக்குமார் தெரிவித்தார். இந்நிலையில், தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன், விஜய் நல்லத்தம்பி ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.



 

 



 

இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்...

"விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த 15.11.2021-ம் தேதி முன்னாள் அமைச்சர் திரு. K.T. ராஜேந்திரந்திர பாலாஜி மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் பெறுவதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 17.12.2021-ம் தேதி அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மாண்புமிகு உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. தகவலறிந்து முன்னாள் அமைச்சர் அன்றைய தினம் அவசரமாக விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டு காரில் ஏறிச் சென்றவர் வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று தலைமறைவாகியுள்ளார். இவரை கைது செய்ய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவில் 8 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.  " என தெரிவித்துள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு அதிக அளவில் தனிப்படைகள் அமைத்தும், இதுவரை ராஜேந்திரபாலாஜியை போலீசாரால் நெருங்க முடியவில்லை. அவர் ஓடிக்கொண்டே இருக்க, போலீசார் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.