தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று சிறு குறு தொழில் நிறுவனங்களுடன் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் தா.மோ அனபரசன் ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள உள்ளார்.


தமிழக மின்சாரத் துறை தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதேபோன்று மின்சார கட்டணத்தையும் சேர்த்து, சோலார் மேற்கூரை கட்டணத்தையும் உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு நேற்று அதாவது செப்டம்பர் 25 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்தது. 


தமிழ்நாடு அரசு தொழில்துறை நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தை 430 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இந்த நிலைக்கட்டணத்தை திரும்ப பெறவும், தொழில்துறை நிறுவனங்களுக்கான 8 மணி நேர பரபரப்பு நேர கட்டணம் (Peak Hour Charges) கட்டணத்தை திரும்ப பெறவும், 3B - TARIFF கட்டண முறையில் இருந்து 3A1 - TARIFF கட்டண நடைமுறைக்கு மாற்ற வேண்டும், தொழில்நிறுவனத்தினர் பயன்படுத்தும் சோலார் ( Solar ) மின்சாரத்திற்கான நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியும், ஆண்டுக்கொரு முறை மின் கட்டண உயர்வு அறிவிப்பான Multi Year Tariff -யை உடனடியாக ரத்து செய்யவும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர்க்க வேண்டியும் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக சேலம், மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.


இந்நிலையில், சிறு குறு தொழில் நிறுவனங்களுடன் ஊரக தொழில்த்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். சென்னை கிண்டி சிட்கோ அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் திருப்பூர், கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறு குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கையை கேட்டறிய உள்ளார்ர் அமைச்சர் தா. மோ அன்பரசன். தொழில் நிறுவனங்களுக்கான சலுகைகள் அறிவிக்கலாமா வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  


இது தொடர்பாக நேற்றைய முன்தினம் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், “தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் அடுத்தடுத்து இரு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. தொழில் மற்றும் வணிகப் பிரிவினருக்கான மின்சாரக் கட்டணம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உயர்த்தப்பட்டிருப்பதால் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதுடன், முதலீடு வெளியேறுதல், வேலையிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.


சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை வீழ்ச்சியிலிருந்து காப்பாற்றும் நோக்குடன் அவற்றின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும். மின்கட்டணக் குறைப்பு உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை எந்த அளவுக்கு நிறைவேற்ற முடியுமோ, அந்த அளவுக்கு நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 


ADMK Breaks Alliance: கூட்டணி முறிவு: அண்ணாமலை படத்திற்கு அல்வா ஊட்டிய திண்டிவனம் அதிமுகவினர்...


Jayalalitha EPS: அன்று ஜெயலலிதா.. இன்று இபிஎஸ்..! கூட்டணியை உதறி தள்ளிய அதிமுக.. திரும்பிய வரலாறு!