அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து அதிமுகவின் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். அப்பொழுது அண்ணாமலையின் உருவபடத்திற்கு அல்வா, ஜிலேபி லட்டு ஊட்டி கிண்டல் அடித்தனர்
அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது:
அதிமுக தலைவர்கள் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இதனால், அதிமுக கூட்டணயில் பாஜக இல்லை என்று அதிமுக தலைவர்கள் கூறிக் கொண்டு வந்தனர். நேற்று கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தே ஆக வேண்டும். அதிமுக தலைமையில் திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணியை தனித்தே உருவாக்குவோம் என பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் கூறியதாக தெரிகிறது.
இதனை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு, 2024 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதை அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
என்ன நடந்தது?
அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர். வார்த்தை போரின் உச்சக்கட்டமாக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஜெயக்குமார் அறிவிப்பு வெளியிட்டார். இதனால், இருகட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபட்டு விமர்சித்துக் கொண்டனர்.
அதேநேரம், அண்ணாமலை பேசுவது சரியில்லை அவருடன் தான் மோதலே தவிர, பாஜக உடன் கிடையாது என சில அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேசினர். இதனிடயே, அதிமுக மூத்த நிர்வாகிகள் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க முயற்சித்தனர். இருப்பினும் அவர்களுக்கு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கும் வாய்ப்பு தான் கிடைத்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதா வழியில் இபிஎஸ்:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் மிக பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. சசிகலா - ஓபிஎஸ் மோதல், ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் என அதிரடி மாற்றங்களுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்தது.
அந்த தேர்தலிலும், பாஜக - அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணியில் பாஜக இடம்பெற்ற போதிலும் 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபேற்றது. இந்த சூழலில், ஜெயலலிதா வழியில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது.