முறிந்தது கூட்டணி:


கடந்த ஒரு வருட காலமாக அதிமுக, தமிழ்நாடு பாஜகவுக்கிடையே மோதல் போக்கு நிலவி வந்தது. குறிப்பாக, பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. சமீபத்தில் கூட, முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து அண்ணாமலை பேசிய கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடும் எதிர்வினையாற்றினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜூ வரை, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்தனர்.


இதுகுறித்து, அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி வரை சென்று, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து அண்ணாமலை குறித்து புகார் அளித்ததாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு பாஜக தேசிய தலைமை உடன்படவில்லை என தகவல் வெளியானது.


இச்சூழலில், பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என நினைக்கும் பாஜகவுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. வடமாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென்மாநிலங்களில் கிடைக்கும் வெற்றியின் மூலம் சரிகாட்ட நினைக்கும் பாஜக தேசிய தலைவர்களுக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளது.


”அதிகாரம் இல்லை”


இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், ”தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக  விலகுவதாக அறிவித்திருப்பது குறித்து பாஜக மாநில அண்ணாமலை கூறியிருக்கிறார். கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை பதில் தரும். தேசிய தலைமை அறிவிக்கும் வரையில் நாங்கள் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. நான் இதைப்பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.


தேசிய தலைமை குறித்த நேரத்தில் முடிவு எடுத்து அறிவுறுத்தல் கொடுப்பார்கள். அதிமுக கருத்து குறித்து கருத்து சொல்ல எங்களுக்கு அதிகாரம் இல்லை. தேசிய தலைமை முடிவு எடுக்கும் வரை நான் எந்த கருத்தும் சொல்வதாக இல்லை” என்று  தெரிவித்துள்ளார். 


அண்ணாமலை சொன்னது என்ன?


மேலும், கோவையில் பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, "நான் யாத்திரையில் இருக்கிறேன். இதில் அரசியல் பேச மாட்டேன்” என்று கூறினார்.மேலும், "அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதற்கான காரணத்தை அவர்களது அறிக்கையில் பார்த்தேன். இதுகுறித்து தேசிய தலைவர் பேசுவார்கள். அவர்கள் தான் சரியான நேரத்தில் பதில் தருவார்கள். பாஜக ஒரு தேசிய கட்சி. எனவே, கூட்டணி முடிவுகளை தேசிய தலைமைதான் பேசுவார்கள்” என கூறினார். 




மேலும் படிக்க 


"பாஜகவுக்கு மிகபெரிய இழப்பு" அதிமுக கூட்டணி முறிவு குறித்து பிகார் துணை முதலமைச்சர் கருத்து