தேசிய அளவில் பாஜக வலுவான கட்சியாக இருக்கும் போதிலும் தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம்தான் நிறைந்திருக்கிறது. எப்போதும், திமுக, அதிமுகவுக்கிடையேதான் போட்டி இருந்து வந்துள்ளது. எவ்வளவு கட்சிகள் இருந்தாலும் இரண்டு திராவிட கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது வழக்கம்.
பாஜகவுடன் முதல்முறையாக கூட்டணி வைத்த ஜெயலலிதா:
தேசிய அளவில் பாஜக வலுவாக இருக்கும்போதே இப்படி என்றால், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் சொல்லவா வேண்டும். ஆனால், வடநாட்டு கட்சி என பாஜகவை ஒதுக்கி தள்ளிய காலத்தில் தமிழ்நாட்டில் முதல்முறையாக அக்கட்சியுடன் கூட்டணி வைத்தவர் ஜெயலலிதாதான்.
கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், முதல்முறையாக பாஜகவுடன் இணைந்து அதிமுக தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில், 30 தொகுதிகளை அக்கூட்டணி கைப்பற்றியிருந்தது. அதிமுக அளித்த ஆதரவால்தான் பாஜகவால் மத்தியில் ஆட்சி அமைக்க முடிந்தது. ஆனால், திடீரென பாஜகவுக்கு அளித்த ஆதரவை ஜெயலலிதா திரும்பபெற்றார். இதனால், பாஜகவின் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து, கடந்த 2004ஆம், அதே பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்து. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் அக்கூட்டணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு சிறுபான்மையினர் வாக்குகளே காரணம் என அரசியல் வல்லுநர்கள் கூறினார்கள்.
அன்றே சொன்ன ஜெயலலிதா:
ஒரு கூட்டத்தில், ஜெயலலிதா, இதை வெளிப்படையாகவே பேசினார். "நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன். நான் செய்த தவறை ஒப்புக்கொள்ளும் துணிச்சல் எனக்கு உண்டு. அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் பாஜக ஆட்சியை நானே கவிழ்த்தேன். இனி ஒருபோதும் அதிமுக பாஜகவுடன் தொடர்பு வைத்து கொள்ளாது" என ஜெயலலிதா தெரிவித்தார்.
அதன் பிறகு, ஜெயலலிதா உயிரிழக்கும் வரை பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கவே இல்லை. கடந்த 2009ஆம் ஆண்டு, மூன்றாம் அணியிலும், 2011 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக - இடதுசாரிகளுடனும், 2014ஆம் ஆண்டு தனித்தும் தேர்தலை சந்தித்தது அதிமுக. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, மோடியா? லேடியா? என பேசி பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதா வழியில் இபிஎஸ்:
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவில் மிக பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. சசிகலா - ஓபிஎஸ் மோதல், ஓபிஎஸ் - இபிஎஸ் மோதல் என அதிரடி மாற்றங்களுக்கு பிறகு 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்தது.
அந்த தேர்தலிலும், பாஜக - அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணியில் பாஜக இடம்பெற்ற போதிலும் 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபேற்றது. இந்த சூழலில், ஜெயலலிதா வழியில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது.