Mettur Dam: மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீர் நாளை முதல் நிறுத்தப்படுகிறது.  நான்கு மாதங்களுக்கு பிறகு மேட்டூர் அணை நீர்மட்டம் 32 அடிக்கும் கீழ் குறைந்துள்ளதால் பாசன நீர்திறப்பு நிறுத்தப்படுகிறது. 


வறட்சியை சந்திக்கும் மேட்டூர் அணை:


தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்திற்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இருப்பினும், கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருகின்றன. ஆனாலும், கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. 


இதனால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெள்ளம் பெருக்கெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு  அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.  சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 32 அடியாக குறைந்துள்ளது.


நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,004 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 334 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 154 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 32.25 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 8.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது.


நாளை முதல் நீர் திறப்பு நிறுத்தம்:


குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நாளை முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அக்டோபர் 12ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட உள்ள நிலையில், அதுவரை இதே நிலைதான் நீடிக்கும் என்று தெரிகிறது.


இதற்கிடையில், டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.  குறுவை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  இருப்பினும், கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் திறந்து விடப்பட்டால் தான் மேட்டூர் அணைக்கு தண்ணீர்  வரத்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.