விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் அங்குள்ள ஆதிதிராவிடர் பகுதிக்கும் நடுக்குப்பம் கிராமத்தின் பகுதிக்கும் இடையில் உள்ள பொது இடத்தில் பாமக கொடிக்கம்பம் இருந்துள்ளது. இந்த கொடி கம்பத்தை கடந்த வாரம் யாரோ மர்ம நபர்கள் பிடுங்கி சென்றுள்ளனர். இந்நிலையில் வரும் 09ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் நடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளர் குமரன், துணை ஒன்றிய செயலாளர் மாரிமுத்து ஆகியோர் தலைமையில் நேற்று மாலை கடந்த வாரம் கொடிக்கம்பத்தை பிடுங்கி செல்லப்பட்ட அதே இடத்தில் புதிதாக சிமெண்ட் கட்டை அமைத்து கொடிக் கம்பமும் அமைத்துள்ளனர். இந்நிலையில் இதனைப் பார்த்த நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்தை இந்த இடத்தில் அமைக்க கூடாது என கூறி அந்த கொடிக்கம்பத்தை கீழே சாய்த்து உள்ளனர்.
இதனைப் பார்த்த அப்பகுதி பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் குமரன் தலைமையில் ஒன்று திரண்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரை அழைத்து தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரவு நேரம் என்பதால் போலீஸ்காரர்கள் கூறியதையும் அப்பகுதியில் கூடி இருந்த கட்சி நிர்வாகிகள் கேட்கவில்லை. இதன் காரணமாக மேலும் பதட்டமான சூழ்நிலை உண்டானது. இதனால் போலீசார் செய்வதறியாமல் அப்பகுதியில் எந்த கட்சி கொடிக்கம்பம் அமைக்க கூடாது என்று கூறி மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் மரக்காணம் போலீசார் பொது இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து கொடிக்கம்பங்களையும் ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.
இதனைப் பார்த்த பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று எங்கள் கொடி கம்பத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் நாங்கள் சாலை மறியல் செய்வோம் எனக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிக்கம்பத்தை சாய்த்த நடுக்குப்பம் பகுதியை சேர்ந்த விசிக கட்சியை சேர்ந்த பெருமாள் மகன் குழந்தைவேலு மற்றும் அமாவாசை மகன் நாகப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நடுக்குப்பம் பகுதியில் பாமக கொடிக்கம்பம் உடைக்கப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.