மேகதாது அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதற்கான கர்நாடகத்தின் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கக் கூடாது என்றும், இது தொடர்பாக இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழகத்தின் நலனுக்கு எதிராக விரிக்கப்பட்டுள்ள கர்நாடக அரசின் பேச்சு வார்த்தை என்ற வஞ்சக வலையில் தமிழக அரசு சிக்கிக் கொள்ளக்கூடாது.


மேகேதாட்டு அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவளிக்க வேண்டும் என்ற கர்நாடக முதல்வரின் கோரிக்கையில் எந்த நியாயமும் இல்லை. மேகேதாட்டு பகுதியில் அணை கட்டுவதை நியாயப்படுத்த தமிழகத்தில் பவானி ஆற்று பாசனப் பகுதியில் குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்கள் கர்நாடகத்தின் ஒப்புதல் பெறாமல் செயல்படுத்தப்படுவதைப் போல, மேகேதாட்டு அணை மற்றும் நீர்மின்னுற்பத்தி திட்டத்தையும் அனுமதிக்க வேண்டும் என்று எடியூரப்பா கூறுவது தமிழகத்தை ஏமாற்றும் முயற்சியாகும்.


குந்தா, சில்லஹல்லா நீர் மின்திட்டங்களையும், மேகேதாட்டு அணை மற்றும் நீர்மின் திட்டத்தையும் ஒப்பிடுவதே தவறாகும். மேகேதாட்டு அணை நீர் மின்னுற்பத்திக்காகவும், பெங்களூரு நகரத்திற்கு 4.75 டி.எம்.சி குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் தான் கட்டப்படுவதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறுவதை கர்நாடகத்தின் கடந்த கால வரலாறையும், இந்த சிக்கலின் முழு பரிமாணத்தையும் அறிந்த எவரும் நம்ப மாட்டார்கள். மத்திய அரசிடம் கர்நாடக அரசு கடந்த 2019&ஆம் ஆண்டு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையில் மேகேதாட்டு திட்டம் ரூ.9,000 கோடியில் செயல்படுத்தப்படும்; 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து விட்டு மேகேதாட்டு குடிநீர் திட்டத்திற்கான அணை என்றால் அதை அப்பாவிகள் கூட நம்ப மாட்டார்கள்.


மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பானதாகும். கர்நாடகத்தில் இப்போது காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர், கபிபி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளின் கொள்ளளவு 115 டி.எம்.சி ஆகும்.  ஏற்கனவே கர்நாடகா அங்குள்ள நீர்நிலைகளை இணைத்து 40 டி.எம்.சி வரை தண்ணீரை கணக்கில் காட்டாமல் சேமித்து வைக்கிறது. மேகேதாட்டு அணையில் 70 டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்றால் ஒரே நேரத்தில் 225 டி.எம்.சி நீரை சேமித்து வைக்க இயலும். இப்போதே உபரி நீரை மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் அனுப்புகிறது. புதிய அணையும் கட்டப் பட்டால் தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட வராது. இது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.




மேகேதாட்டு அணையை எப்படியாவது கட்டிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கர்நாடகம்  அதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் தமிழ்நாட்டை பேச்சுக்கு அழைப்பது வழக்கம். கர்நாடக அரசு  கேட்டுக் கொண்டதன் பேரில் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் தேதி தம்மை சந்தித்த தமிழ்நாட்டின் அப்போதைய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் மேகேதாட்டு அணை குறித்து கர்நாடக அரசுடன் பேச்சு நடத்தும்படி பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாக செய்திகள் வெளியாகின. பின்னர் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அப்போதைய கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கேட்டுக்கொண்டதன் பேரில் மேகேதாட்டு அணை குறித்து தமிழ்நாடு - கர்நாடகா அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்போவதாக அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். இத்தகைய பேச்சுக்களுக்கு அப்போதே பா.ம.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதைய தமிழக அரசும் கர்நாடகத்துடன் இதுகுறித்து பேசவில்லை.


கடந்த காலங்களில் வீசப்பட்ட அதே வலையைத் தான் இப்போது எடியூரப்பா வீசியிருக்கிறார். மேகதாது அணை குறித்து கர்நாடக அரசுடன் தமிழகம் பேச்சுவார்த்தை நடத்தினால் நமக்குதான் பாதிப்பு ஏற்படும். 1970-களில் காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக, சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால், நமக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். தமிழக அரசுடன் பேச்சு நடத்திக் கொண்டே காவிரியின் குறுக்கே 4 அணைகளை கர்நாடகம் கட்டியது.


காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நேர்மையும், அறமும் எத்தகையது என்பதை கடந்த காலங்களில் நாம் கற்ற பாடங்களும், பட்ட காயங்களும் நமக்குச் சொல்லும். அவற்றை நினைவில் கொண்டு மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விடுத்துள்ள அழைப்பை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். மாறாக, உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை சிறப்பாக நடத்தி காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க வேண்டும்.