சேலம் ஆவின் விற்பனை நிலையங்கள் மற்றும் பால் பண்ணையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, காலை 5:30 மணி முதல் சேலம் மாநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆவின் விற்பனை நிலையங்களான அஸ்தம்பட்டி ரவுண்டானா, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு, மெய்யனூர் சாலை பல்வேறு இடங்களில் அமைச்சர் நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மக்களிடம் குறைக்கப்பட்ட விலையில் ஆவின் பால் விற்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார். ஆவின் விற்பனை நிலையங்களில் ஆவின் தயாரிக்கும் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டுமென்று விற்பனையாளர்களிடம் கூறினார். பின்னர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள ஆவின் பாலகத்திற்கு சென்ற அமைச்சர், சாலையில் அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவருக்கு ஆவின் பொருட்களை வழங்கி, பால் பண்ணை வளாகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி பிரிவு, கிடங்குகள் ஆகியவற்றை நேரில் சென்று சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், கடந்த ஆட்சியின்போது ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறினார், ஆவின் ஊழியர்களாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி பணிநீக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், 636 முதுநிலை மற்றும் இளநிலை ஆலை பணியாளர்களை நியமிக்க முறைகேடாக பணம் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஆவடி நாசர், அந்தப் பணியிடங்களுக்கு
புதிதாக பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பால் விலை குறைக்கப்பட்ட பிறகு ஆவின் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், மக்கள் தற்போது ஆவின் பால்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் எனவும் தெரிவித்த ஆவடி நாசர், சென்னையில் 22 நிலையங்கள் உள்பட விலைகுறைப்புக்கு பின்பும் பழைய விலைக்கே பால் விற்பனை செய்த நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்றும் கூறினார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வீட்டிற்கு, தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும், கடந்த ஆட்சியில் தவறு செய்த அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திட்டவட்டமாக தெரிவித்தார்