தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த தமிழ்நாட்டில் தேசியத்திற்கு எதிரான செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்க்கும்போது தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் பொதுமக்களிடையே மேலோகி நிற்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்ததிலிருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது. இதற்கான காரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே அளித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. அதிலே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல்வர் இந்தியா அதாவது பாரதம் மாநிலங்களை கொண்ட ஓர் ஒன்றியமாக இருக்கும் என்று குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதைத்தான் பயன்படுத்துகிறோமே தவிர சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை என்றும், ஒன்றியம் என்பது தவறான சொல் அல்ல என்றும் மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது என்பதுதான் பொருள் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


இந்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிடுவதில் நியாயம் இருப்பதாக தெரியவில்லை. இந்த ஒப்பீடு பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் எந்த தலைவரும் இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறவில்லை இன்னும் சொல்லப்போனால் மாநிலங்கல் பிரித்து தரப்பட்டுள்ளது என்றுதான் பேரறிஞர் அண்ணா 1963ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பேசியுள்ளார். அதாவது மாநிலங்களை பிரித்து கொடுப்பதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் தான் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். எனவே மாநிலங்கள் ஒன்று சேர்ந்ததுதான் யூனியன் என்ற வார்த்தைக்கு பொருள் என்ற வாதம் சரியானதல்ல. மொத்தத்தில் மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் என்பதைதான் Union of States என்பதற்கு பொருள் என்பதையும், இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதைத்தான் Union of States என்ற வாசகம் நமக்கு உணர்த்துகிறது என்பதையும் இந்த தருணத்தில் நான் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 



ஜெய் ஹிந்த் என்ற சொல் சிறு குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியோர் வரை நாட்டுப்பற்றை தட்டியெழுப்பும் மந்திரச் சொல், இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த இந்த வெற்றிச் சொல் அண்மையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் ஆற்றிய உரையில் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டி இதனால் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் பேசியது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி இந்த சொல் இந்திய விடுதலைப்போராட்டத்தின்போது உணர்வுப்பூர்வமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட வெற்றிச்சொல். இந்த சொல்லை இழிவுப்படுத்தும் வகையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசிய வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென்று ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்