அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது பொதுமக்கள் இல்லை எனவும் பின்னணியில் பாஜக உள்ளது எனவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 


ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் பெய்த மழையை தமிழக அரசு கட்டுக்குள் வைத்தது. ஆனால் அதைத்தொடர்ந்து விழுப்புரம், கடலூர், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அப்பகுதிகள் முழுக்க முழுக்க வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஏரிகள் நிரம்பி வழிவதால் சாத்தனூர் அணையை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 


இதனையடுத்து தமிழக அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து வெள்ள மீட்பு பணிகளை ராணுவப்படையினருடன் சேர்ந்து செய்து வருகின்றனர். ஆனால் முறையான முன்னறிவிப்பு இல்லாமல் அணையை திறந்ததே இந்நிலைமைக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. திண்டிவனம் அடுத்த மயிலத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. மக்கள் அனைவரும் நிவாரணம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில் இன்று அமைச்சர் பொன்முடி, நிவாரணப்பொருட்கள் வழங்கவும் மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்யவும் விழுப்புரம் சென்றார். அப்போது அவர் மீது மர்மநபர்கள் சேற்றை வாரி வீசினர். இதனால் அவரின் வெள்ளை வேட்டி சட்டை முழுவதும் கரையானது. 



இதையடுத்து அமைச்சர் பொன்முடி அங்கிருந்து வெளியேறி காரில் ஏறி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. மேலும் அமைச்சர் பொன்முடி மீது விழுப்புரம் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி சேற்றை வாரி வீசியதாக சொல்லப்பட்டது. 


இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியது பொதுமக்கள் இல்லை எனவும் பின்னணியில் பாஜக உள்ளது எனவும் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. சேற்றை வீசிய நபரின் பெயர் ராமர் என்கிற ராமகிருஷ்ணன். வயது 24. இவரது தந்தை பெயர் ராமச்சந்திரன். இவர்களது சித்தி விஜயராணி என்பவர் பாஜகவில் உள்ளார் எனவும் அதன் காரணமாக ராமர் என்கிற ராமகிருஷ்ணன் பாஜக அனுதாபியாக செயல்பட்டு வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும்,  அரசியல் தூண்டுதலால் இவ்வாறு செய்யப்பட்டதா என்பது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.