ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர். அப்போது சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், சமீபத்திய தகவலின்படி 28 பேர் இறந்துள்ளதாகவும், குறைந்தபட்சம் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு, பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய TRF (தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்) அமைப்பினர், இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு உடனடியாக செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், இரவு 9 மணியளவில் ஜம்மு காஷ்மீர் வந்தடைந்தார் அமித்ஷா.
அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி உத்தரவு:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தொலைபேசியில் உரையாடினார். தற்போது சவுதி அரேபியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, உள்துறை அமைச்சருக்கு அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டு, தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடுமாறு தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கின்றன.
அவர் தெரிவித்ததாவது, “ ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்தக் கொடூரமான செயலுக்குப் பின்னால் இருப்பவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்ப முடியாது. அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றி பெறாது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான எங்கள் உறுதியை அசைக்க முடியாதது, அது இன்னும் வலுவடையும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உயர்மட்டக்குழுவை கூட்டிய அமித்ஷா:
இந்நிலையில் இத்தாக்குதலைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் அவசர உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் உளவுத்துறை இயக்குநர், மத்திய உள்துறைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோருடனும் ஷா கலந்துரையாடினார். சிஆர்பிஎஃப் டைரக்டர் ஜெனரல், ஜம்மு காஷ்மீர் காவல்துறை டைரக்டர் ஜெனரல் மற்றும் ராணுவ அதிகாரிகள் போன்ற மூத்த அதிகாரிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கூட்டத்தில் இணைந்தனர்.
காஷ்மீர் வந்தடைந்த அமித்ஷா:
இந்த சம்பவம் குறித்து அமித்ஷா வேதனை தெரிவித்ததோடு, பஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடுவதாகவும் கூறினார், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலால் நான் வேதனையடைந்தேன். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கொடூரமான பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது, மேலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் குற்றவாளிகள் மீது நாங்கள் கடுமையாக நடவடிக்கை எடுப்போம். இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். விரைவில் அனைத்து நிறுவனங்களுடனும் அவசர பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்தை நடத்த ஜம்மு காஷ்மீருக்குச் செல்லவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இரவு ஜம்மு காஷ்மீர் வந்தடைந்த அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவை சந்தித்து, நிலைமை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.