மதுரை மக்களவை தொகுதியின் உறுப்பினராக பதவி வகிப்பவர் சு.வெங்கடேசன். இவர் தமிழக பிரச்சினைகள் தொடர்பாக அடிக்கடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார். இந்த நிலையில், மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் இன்று கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் எழுதியிருப்பதாவது, 


" தபால் துறையில் மக்கள் தொடர்பு நிலையில் உள்ள அலுவலர்கள் நியமனங்களுக்கு  நடைபெறும் தேர்வுகளில் மாநில மொழி தேர்ச்சிக்கு எந்த ஏற்பாடும் இல்லை. அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர், ஆய்வாளர்கள் ஆகிய பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான தேர்வுகளை அலுவலர் நியமன ஆணையம் நடத்தும் போது தமிழில் அவர்கள் உரையாடக் கூடியவர்களா? என்று கூட சோதித்துப் பார்ப்பதில்லை. இவர்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் திண்டாடுகிறார்கள். அந்த பணியாளர்களும் தங்கள் பணியை திறம்பட ஆற்ற முடிவதில்லை. ஆய்வாளர்கள் கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பவர்கள். கடந்த 10 ஆண்டுகளில் ஆய்வாளர் பணிக்கு நடைபெற்றுள்ள நேரடி நியமனங்களில் தேர்வு செய்யப்பட்ட 60 பேரில் 57 பேர் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று அறிய வருகிறேன். 




தபால் அலுவலகங்களின் கதவைத் தட்டுபவர்களில் பெரும்பான்மையோர் கிராமங்களில் இருந்து வருபவர்கள். பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்கள். இத்தகைய கோடிக்கணக்கான மக்களை இணைக்கிற தபால் ஊழியர்கள் தமிழ் அறிந்திருக்க வேண்டாமா?  எனவே, தபால் ஊழியர் நியமன முறையில் தமிழ்த் தேர்ச்சிக்கான தேர்வு இணைக்கப்பட வேண்டும். பள்ளி இறுதி தேர்வு/ மேல்நிலை கல்வித் தேர்வில் தமிழ் பாடமாக இருந்து அவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த தேர்வில் விதி விலக்கு அளிக்கலாம்.  இந்த கோரிக்கையை பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். இது அஞ்சல் சேவையை மேம்படுத்தும். அதை நாடி வரும் மக்களுக்கும் பெரும் பயன் தரும். ஒன்றிய அரசு இக்கோரிக்கைக்கு செவிமடுக்குமென்று நம்புகிறேன்."


இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.


மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பணியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் நியமனம் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் முதல் கட்ட அதிகாரிகள் பணிகளுக்குதான் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட பதவிகளுக்கும் வெளி மாநிலத்தவர்கள் நியமிக்கப்பட்டு வருவது அதிகரித்துள்ளது.




குறிப்பாக, வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இதுபோன்ற பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அந்த அதிகாரிகளை அணுகும்போது மொழி பிரச்சினையால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பான குற்றச்சாட்டுகள் தமிழ்நாட்டில் அடிக்கடி எழுந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல தலைவர்களும் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களையே நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  


மேலும் படிக்க : Tamilnadu NEET : அரசின் நீட் விலக்கு மசோதா வெறும் கானல்நீரா? சட்டம் சொல்வதென்ன? - ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு