காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ளது பழையசீவரம் கிராமம் இக்கிராமத்தில் 1100 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய பிரம்ம சிரச்சேதக மூர்த்தி என்னும் சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், பழையசீவரம் கிராமத்தில் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, பாழடைந்த பழமையான கந்த பாலீஸ்வரர் ஆலய இடத்திலுள்ள மரம் செடி கொடிகளை அகற்றி சுத்தம் செய்து பார்த்தபோது, சுமார் 6 அடி உயரமுள்ள பெரிய சிலை ஒன்றை கண்டறிந்தனர்.
இந்த சிலையை ஆய்வு செய்த பொழுது இது சிவபெருமானின் பிரம்ம சிரச்சேதக மூர்த்தி சிலை என தெரியவந்தது. இது 11 ஆம் நூற்றாண்டை சார்ந்தாகும். 6 அடி உயரம் 2 அடி அகலம் கொண்டு நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில், இச்சிலை உள்ளது தலை, முகம், மார்பு ஆகிய பகுதிகள் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
தலையில் சிதைந்தநிலை கிரீடமும் இருகாதிகளில் பத்ர குண்டலமும் கழுத்தை ஒட்டி அணிகலன்கலாக சரபளியும் வலதுபக்க ஒரு கரத்தில் கத்திரி முத்திரையில், பிரம்மனின் தலையை ஏந்தியும் மற்றொரு கரத்தில் பக்தர்களை அருள்பாலித்தும் இச்சிலை காட்சியளிக்கிறது. இடதுபக்க ஒரு கரத்தில் கத்திரி முத்திரையில் மழுவை ஏந்தியும் மற்றொரு கரத்தை இடுப்பில் கைவைத்து நிலையில் மார்பில் அழகிய அணிகலன்கள் இடுப்பிலிருந்து முட்டி வரை அரையாடையும் கைகால்களில் காப்பு ஆகியவற்றோடு சமபங்கநிலையில் அழகிய கோலத்துடன் வீற்றிருக்கிறார்.
இது சிவனின் 64 அவதாரங்களில் 54 ஆவது அவதாரமான பிரம்ம சிரச்சேதக மூர்த்தி ஆகும். சிவன் பிரம்மா ஆகிய இருவருக்கும் ஐந்து தலைகள் காணப்பட்டன, எல்லோரும் சிவனுக்கு முக்கியத்துவம் அளித்தனர். இது பிரம்மாவிற்கு பெரும் குறையாக தோன்றியது படைப்புத் தொழிலை சேர்த்து செய்வதால் தானே உயர்ந்தவன் என்கிற கர்வம் ஏற்பட்டது. பிரம்மா கர்வத்துடன் செயல்பட ஆரம்பித்தார் இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது பிரம்மாவின் கர்வத்தை அடக்கவும் குழப்பத்தை தீர்க்கவும் பிரம்மாவின் ஒரு தலையை தன்னுடைய கரத்தால் சிவன் கிள்ளி எறிந்து விட்டார்.
இவ்வாறு பிரம்மாவின் சிரசு ஆகிய தலையை குறைத்ததால் பிரம்ம சிரச்சேதக மூர்த்தி என்று அழைக்கப்பட்டார் என புராணங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் இதுவரை சிவனின் இந்த அவதாரம் சிலையாக கண்டறியப்படவில்லை, எனவே இது மிக மிக அரியதாகும். இந்த தகவலை தமிழ்நாடு தொல்லியல்துறை சென்னை அருங்காட்சியக காப்பாட்சியர் சுந்தர்ராஜன் அவர்களும் உறுதி செய்துள்ளதாக தெரிவித்தார்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்திற்கு செல்வதற்கு வழி கூட இல்லை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது. கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமூகத்திற்கு அடையாளமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும், இவ்வரிய கலை பொக்கிஷங்களை பாதுகாக்கபட வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எண்ணமாக உள்ளது.
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X