பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மின்சார வாரிய ஊழியர்கள் தொடர்ந்து அரசுக்கு வைத்து வந்தனர். இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரி 10-ந் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர்.  மின்சார வாரிய ஊழியர்களின் இந்த போராட்ட அறிவிப்புக்கு சில தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.


மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்:


இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த சரவணன், ஏழுமலை ஆகிய இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.


அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தின்போது, சமரச பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது என்றும், சட்டத்தின்படி வேலை நிறுத்த போராட்டத்திற்கு 6 வாரங்கள் முன்கூட்டியே அறிவிக்கை வெளியிடப்படவில்லை என்பதால் மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.


தடை விதித்த நீதிமன்றம்:


தமிழக அரசு தரப்பிலும் மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஆவின்பால் விநியோகம், மருத்துவமனை, பள்ளி மற்றும் கல்லூரிகளின் செயல்பாடுகள் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.


அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். தற்போது கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலிய பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும், பள்ளி ஆசிரியர்கள் மறுபுறமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தாலும், அரசு சார்பிலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தமிழ்நாடு சட்டமன்றத்தில் விரைவில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  


மேலும் படிக்க: ஆளுநர் உரையில் வார்த்தைகள் தவிர்ப்பு.. ஆளுநர் மீது முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்..


மேலும் படிக்க: தேசிய கீதத்தை ஆளுநர் அவமதித்தார்.. அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..