ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான வகையில் தன்னுடைய உரையை வாசித்திருக்கிறார் என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.


அனைவருக்கும் வணக்கம் என கூறி சட்டப்பேரவையில் தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. அதில், “ மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே என உரையை வாசித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.” என பேசினார். 


சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசிக்கொண்டு இருந்தபோது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக தற்போது முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 


மேலும் ஆளுநர் உரையின் போது அவர் உரையில் இடம்பெற்ற பல வார்த்தைகளை கூற மறுத்து அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான வகையில் நடந்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் கொள்கைள் மற்றும் ஆளுநருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், உரை தொடங்கும் முன் வரை அமைதி காத்து அரசு சார்பாக மரியாதை அளித்தோம். அனைவரும் அதையே பின்பற்றினோம்.


இன்று ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணான வகையில் தன்னுடைய உரையை வாசித்திருக்கிறார் என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் தீர்மானம் கொண்டு வரும் சூழல் வந்துள்ளது.


ஆளுநர் உரை என்பது கொள்கை விளக்க உரையாகும். ஏற்கனவே முதல்வர் தரப்பில் ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டது. முழுமையாக ஒப்புதல் அளித்த பிறகும், இன்றைய ஆளுநர் உரை மாற்றி உரைக்கப்பட்டது ஏற்புடையது அல்ல.


தமிழகம் முன்னனி மாநிலங்களில் ஒன்று, நவீன தமிழகமாக மாற்றிய தந்தை பெரியார், கலைஞர், பெருந்தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி தந்த அம்பேதகர் பெயரை கூட ஆளுநர் உரையில் தவிர்த்துள்ளார்.


ஆளுநர் தேசிய கீதத்திற்கு கூட உரிய மரியாதை கொடுக்காமல், முதல்வர் பேசும்போது வெளியே சென்றது தேசிய கீதத்திற்கு இழுக்காக கருதப்படுகிறது. அதிமுக அவையில் இருந்திருக்க வேண்டும். தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பே வெளிநடப்பு செய்தது மிகவும் அநாகரிகம்.


ஆளுநர் சொந்த விருப்பு வெறுப்பை அவையில் காட்டியிருக்கக்கூடாது. இதனால் தான் முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார் என கூறியுள்ளார்.