முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு, சொத்துக்குவிப்பு முறைகேடு உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
டெண்டர் முறைகேடு, சொத்துக்குவிப்பு:
இதையடுத்து, அறப்போர் இயக்கம் மற்றும் தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்தது. இதையடுத்து, இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் தொடர்பாக, கடந்த 8-ந் தேதி நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமரவு முன்பு விசாரணைக்கு வந்தது. எஸ்.பி.வேலுமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக அரசு உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறியிருந்தார். அதேசமயம் தமிழக அரசு சார்பில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம் தவறு என்றும், முந்தைய அ.தி.மு.க. அரசும், லஞ்ச ஒழிப்புத்துறையும் தான் உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் கூறியது.
நாளை தீர்ப்பு
அறப்போர் இயக்கம் சார்பில் இந்த டெண்டர் முறைகேடு ஒதுக்க துணையாக இருந்த அரசு அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டுமென்றும், அது கடந்த ஆட்சி காலத்தில் இருந்த அதிகாரிகள் மட்டுமில்லாமல், தற்போதைய மற்றும் எதிர்கால அரசுகளின் அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த சூழலில், தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெண்டர் முறைகேடு மற்றும் சொத்துக்குவிப்பு தொடர்பாக எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய உடனடி நடவடிக்கை - அன்புமணி கடிதத்திற்கு நிதின் கட்கரி விளக்கம்
மேலும் படிக்க : Crime: திண்டுக்கல்லில் பயங்கரம்...கள்ளக் காதலியுடன் கூட்டு சேர்ந்து மனைவியை கொன்ற கணவர் கைது - சிக்கியது எப்படி..?