2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சராகும் தகுதி அன்புமணிக்கு மட்டுமே உள்ளதாக சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறினார். சேலம் - உளுந்தூர்ப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்த அன்புமணிக்கு சேலம் மாவட்ட மக்கள் சார்பில் அவர் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். சேலம் முதல் உளுந்தூர்ப்பேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை 9 இடங்களில் இருவழிப்பாதையாக உள்ளது. இதனால் நாள்தோறும் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்தவண்ணம் இருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர் பலகட்ட போராட்டங்களும் நடைபெற்றது.



இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர் குறித்து கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். அதற்கு கடிதம் மூலம் பதில் அனுப்பிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இந்த நிலையில் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை பிரச்சனைக்கு தீர்வு காண பாடுபட்ட பாமக தலைவர் அன்புமணிக்கு சேலம் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் அருள், இந்த பிரச்சனைக்காக பல போராட்டங்களையும் தேவைப்பட்டால், NHAI அலுவலக முற்றுகை போராட்டத்தையும் நடத்துவதாக அன்புமணி அறிவித்திருந்தார். இப்படி பல்வேறு போராட்டங்களில் மூலமாக தற்பொழுது தீர்வு கிடைத்துள்ளது. ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றி சிந்திக்க கூடிய தலைவராக இருக்கும் அன்புமணி வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக ஆவதற்கு தகுதியானவர் என்றும் குறிப்பிட்டார்.