மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு:
சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் தனது தரப்பில் கூறியிருந்ததாவது, ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டிற்கு ஒன்று என்று இணைக்க முடியும். வாடகை தாரரை இணைத்தால் வீடு காலி செய்யும்போது, வாடகை தாரர் பாதிக்கப்படுவார்கள். உரிமையாளர்கள் முறையான கணக்கு காட்ட முடியாத நிலை ஏற்படும்.
ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாமை நடத்தும் அரசு, மேற்கண்டவற்றிற்கு மாற்றாக என்ன ஆவணங்களை வழங்கலாம் என அறிவிக்கவில்லை என்றும், மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பது மாநில தொகுப்பின் கீழ்தான் வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.
மனு தள்ளுபடி:
இந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதிகள் ராஜா, பரதசக்கரவர்த்தி அமர்வின் முன்பு நடைபெற்று வந்தது. அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முறையான ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்புகள் வெளியானது என்றும், இதில் எந்தவித விதிமீறல்களும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், வாடகைதாரர் 100 யூனிட் இலவச மின்சாரம் பெற வேண்டுமா..? வேண்டாமா? என்பதை உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் உள்ள பிரச்சினை என்றும், இதற்காக ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என்றும், இதன் காரணமாக இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேல்முறையீடா?
இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, தீர்ப்பில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படுமா? என்று மனுதாரர் தரப்பினர் ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: அதிமுக வரவு - செலவு கணக்குகள் இணைய தளத்தில் ஏற்றம்! எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்ததா தேர்தல் ஆணையம்?