சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால் அந்த நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டில் அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் பாதிப்பு குறைவு:
இந்த நிலையில், திருச்சியில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறிதாவது, "ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பரவுகிறது. மத்திய அரசு அறிவுறுத்தல்படி கொரோனா டெஸ்ட் எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம். மக்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி 90 சதவீதம் கடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் 10 விதமாக உருமாற்றம் பெற்றுள்ளது.
கொரோனா, ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா ப்ளஸ், கம்மா, கப்பா, ஒமிக்ரான் என உருமாறிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்ட போதிலும் கூட தமிழகத்தில் உயிரிழப்பு இல்லாமலே இருந்து வந்தது. கொரோனா வைரஸ் உருமாற்றத்தை கருத்தில் கொண்டு 4 கோடி ரூபாய் செலவில் மரபணு பகுப்பாய்வு கூடம் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவி வந்தாலும் தமிழகத்தில் குறைவாகவே பரவுகிறது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் கூறினார்.
ஆறாத வடு:
முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று சீனா மட்டுமின்றி இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பாகிஸ்தான், இலங்கை, அரபு நாடுகள் என உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்தது, முதல் அலையில் இந்தியாவில் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படாவிட்டாலும், இரண்டாவது அலையில் இந்தியாவில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தினசரி உயிரிழந்த சோகம் அரங்கேறியது. குறிப்பாக, கங்கையில் ஒரே நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்ட புகைப்படம் மக்களை கண்கலங்க வைத்தது.
மக்கள் அச்சம்:
கொரோனா வைரஸ் ஒருபுறம் அச்சுறுத்த, ஊரடங்கு மறுபுறம் மக்களை பாடாய்படுத்த மக்கள் கடுமையான சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. கொரோனா வைரசின் இரண்டு அலைகளை எதிர்கொண்ட பிறகு, மெல்ல மெல்ல தற்போதுதான் மக்கள் மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதும், அதன் தாக்கம் ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எதிரொலித்திருப்பதும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், மத்திய அரசு மாநிலங்களை நேற்று உஷார்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் கொரோனா பரவல் ஏற்படுமா? ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.