காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை அருகே, மாங்காட்டில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மாங்காடு அரசு நடுநிலைப் பள்ளியில், 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை செயல்படும் அரசு பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சவுபாக்கியம் (40), இதே பள்ளியில் மாங்காடு, அப்பாவு நகரை சேர்ந்த பியூலா (35), என்பவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம் தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார்.




மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் வராத நேரத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு பள்ளிக்கு சென்று, மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்து வந்துள்ளார்.


இந்நிலையில் ஆசிரியை சவுபாக்கியம், பியூலாவை தரக்குறைவான வார்த்தைகளால், பேசியதாக கூறப்பட்டு வந்த நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாங்காடு போலீஸ் நிலையத்திலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் முறையான விசாரணை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில்  மீண்டும் பள்ளிக்கு வந்த போது பியூலாவை  தரக்குறைவான வார்த்தைகளால் சவுபாக்கியம் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த  நிலையில் வீட்டிற்கு சென்ற பியூலா மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


பியூலா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தற்கொலை செய்து கொண்ட பியூலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பியூலா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் பள்ளிக்கு சென்றனர். அங்கு தலைமை ஆசிரியர் அறையில் இருந்த ஆசிரியை சவுபாக்கியத்தை தாக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற மாங்காடு போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியை சவுபாக்கியம் ஆகிய இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனர்.




இந்நிலையில் ஆசிரியை சவுபாக்கியத்தை கைது செய்யக்கோரி 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாங்காடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் பியூலாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியை சவுபாக்கியம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்ததின் பேரில், சவுபாக்கியத்திடம் மாங்காடு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்,. இதில் தற்கொலை செய்து கொண்ட பியூலாவை குறித்து ஆசிரியை சவுபாக்கியம் அவரது சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்டு இருந்ததாகவும்,  அவதூறான வார்த்தைகளில் பேசியதும் உறுதியானதையடுத்து   அவதூறான வார்த்தைகளால் பேசி பியூலாவை தற்கொலைக்கு தூண்டியதாக அரசு பள்ளி ஆசிரியை சவுபாக்கியத்தை மாங்காடு போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.  அரசு பள்ளி ஆசிரியை தரக்குறைவாக பேசியதால் பள்ளி மேலாண்மை குழு தலைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Suicidal Trigger Warning.


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)