ரவுடிகளுக்கு எதுக்கு இந்த பெயர்? – போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்
சான்றிதழ் பெற ஆன்லைன் வசதிகள் இருந்தாலும் அதை சரியாக பெற முடியவில்லை. அதற்கும் லஞ்சம் செலுத்தி அலுவலகத்தில் பெற வேண்டி உள்ளது” என காட்டமாக தெரிவித்தனர்.

ரவுடிகளுக்கு பட்டப்பெயர் வைக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பட்டப்பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது ”பட்டப்பெயர் இல்லாமல் ரவுடிகளின் பெயர்களை போலீஸ் ஏன் பதிவு செய்வது இல்லை? பட்டப்பெயர்களுக்கு பதிலாக அவர்களின் தந்தையின் பெயரை சேர்க்கலாமே. ரவுடிகள் மேலும் தீவிர ரவுடிகளாகத்தான் சிறைசாலையில் மாறுகின்றனர். பட்டப்பெயரால் விடுதலைக்கு பின் குற்றவாளிகள் பெரிய குற்றவாளிகளாக உருவெடுக்கின்றனர்.
மேலும், ரவுடிகளுக்கு பாம் சரவணன், பாம்பு நாகராஜ் என எதற்கு பட்டப்பெயர்? போலீஸ் பக்ருதீன் என்ற பெயர் அவருக்கு எப்படி வந்தது? பாம் சரவணன், பாம்பு நாகராஜ் போன்ற பெயர்களை பார்த்தாலே பயமாக இருக்கிறது. ரவுடிகளுக்கு பட்டப்பெயர்களை வைப்பதால் சமூகத்தில் அவர்களுக்கான நற்பெயர்கள் பாதிக்கப்படுகிறது.
இனிமேல் கைதிகளுக்கு பட்டப்பெயர்கள் வைக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அதேபோல் ஊழல் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
காவல்நிலையம், தாலுகா அலுவலகம் செல்லவே மக்கள் பயப்படுகின்றனர். எல்லா வேலைகளுக்கும் லஞ்சம் கேட்கின்றனர். அரசு அலுவலகங்களில் ஊழல் இல்லை என போலீசார் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்க முடியுமா?
சான்றிதழ் பெற ஆன்லைன் வசதிகள் இருந்தாலும் அதை சரியாக பெற முடியவில்லை. அதற்கும் லஞ்சம் செலுத்தி அலுவலகத்தில் பெற வேண்டி உள்ளது” என காட்டமாக தெரிவித்தனர்.
மேலும், “11 ஆண்டுகளாக விசாரணை செய்யாமல் கைதியை சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதம். அவ்வாறு வைத்திருப்பவரை விடுதலை செய்ய சட்டம் இருக்கிறது. பணியில் இருக்கும்போது என்கவுண்டர் செய்யும் ஒரு காவல் அதிகாரி தனது ஓய்வுக்கு பின் ஆபத்து இருப்பதாக புகார் அளிக்கிறார். அவருக்கு பாதுகாப்பு பணியில் காவலர்கள் செல்கிறார்கள். எதற்கு டிஜிபி காவலர்களை அனுப்புகிறார். வேண்டுமென்றால் பவுன்சிலர்களை அவர்கள் வைத்துக்கொள்ளட்டும்” என சாடினர்.