டெல்லியில் நடைபெற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிவாரண ஆணையர்கள் மற்றும் பேரிடர் மீட்புப் படைகளின் வருடாந்திர மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா இன்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

Continues below advertisement

பேரிடர் மீட்புப் படைகளின் மாநாடு:

இந்த நிகழ்வில், உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 2 ஆண்டுகளில், நிவாரணம், பேரிடர் மேலாண்மை தொடர்பான அனைத்து நிறுவனங்களின் பயிற்சிகளும் ஒரே தளத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஒருங்கிணைந்த முறையில் செயல்பட ஒரு சிந்தனைக் குழுவை உருவாக்கும்  அணுகுமுறையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

இது, குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், பேரிடர்களை எதிர்த்துப் போராட நாட்டை தயார்படுத்தவும் உதவியதாக அவர் கூறினார். பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் காரணமாக, உலகம் முழுவதும் இன்று பேரிடர்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Continues below advertisement

"பேரிடர்களை நிர்வகிப்பதில் நாமதான் டாப்"

கடந்த 10 ஆண்டுகளில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பேரிடர் மீள் கட்டமைப்புக்கான கூட்டமைப்பு ஆகியவற்றின் பங்களிப்பு காரணமாக, பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியா உலகத்திற்கு தலைமை வகிக்கும் வகையில் முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொள்கை கட்டமைப்புகள், ஆராய்ச்சி, பல்வேறு பயிற்சி கருவிகளை கண்டறிதல், செயலிகளை உருவாக்குதல் மற்றும் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு ஆகியவை மூலம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பாராட்டத்தக்க பணிகளைச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர் நாடு தழுவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், சிறப்பான நற்பெயரை ஈட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த கட்டமைப்பில் மாநில பேரிடர் மீட்புப் படை குறிப்பிடத்தக்க பங்காற்றி உள்ளதாகவும், அதன் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தேசிய பேரிடர் மீட்புப்படை முக்கிய பங்காற்றி உள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.

மார்தட்டி சொன்ன அமித் ஷா:

கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசு பேரிடர் மேலாண்மையில் திறன் மேம்பாடு, வேகம், செயல்திறன் மற்றும் துல்லியம் ஆகிய நான்கு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை அடைந்துள்ளதாகவும் கூறினார். பேரிடர்களைக் கையாளும் நமது திறன் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், வட்டார அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேரிடரின் போது உயிர்களைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியம் என்பதால், வேகத்துடன் செயல்படுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும், பேரிடர் மீட்புப் படைகளின் அர்ப்பணிப்பு அணுகுமுறை மூலமும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.