தஞ்சாவூர்:  தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மொத்தம் ரூ.1,194 கோடி மதிப்பிலான 2461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 4127 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,25,383 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறந்து வைத்தார். இன்று தமிழ்நாடு முதலமைச்சர்  புதிய விரிவான மினி திட்டம்-2024ன் படி பேருந்து வசதி கிடைக்கப் பெறாத இடங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 3,103 மினிபஸ் வழித்தடங்களை தொடங்கி வைக்கும் விதமாக, தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய மினி பஸ் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 325 கோடியே 96 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் 2,461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4,127 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 558 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2,25,383 பயனாளிகளுக்கு வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கிராம செயலக அலுவலகக் கட்டடங்கள், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்கள் என 166 கோடியே 67 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் 2410 முடிவுற்ற திட்டப் பணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பொது சுகாதார அலகு கட்டடம் மற்றும் கணபதி அக்ரஹாரத்தில் 30 லட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார மையம், கும்பகோணம் மாநகராட்சி, மேலக்காவேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 22 லட்சம் ரூபாய் செலவில் ஆய்வகக் கட்டடம், வீரராகவபுரத்தில் 23 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலும் ஊர்ப்புற நூலகக் கட்டடங்கள்.

பள்ளிக்கல்வித் துறை சார்பில் பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 32 இலட்சம் ரூபாய் செலவிலும், பண்ணவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 23 இலட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 30 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவிலும், கண்ணந்தங்குடி மேலையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 32 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவிலும் வகுப்பறை கட்டடங்கள், அதிராம்பட்டினம் காரையூர் தெருவில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 2 கோடியே 32 இலட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவிலும், திருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1 கோடியே 5 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவிலும், செல்லப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 64 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் செலவிலும் என மொத்தம் 325 கோடியே 96 இலட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற 2461 பணிகளை  தமிழ்நாடு முதலமைச்சர்  திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், தார் சாலைகள், பேவர்பிளாக் சாலைகள் அமைக்கும் பணிகள், சுற்றுச்சுவர். கான்கிரீட் நடைபாதை மற்றும் நீர் வசதியுடன் கூடிய தகன கொட்டகைகள், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், நடுவூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் 3 கோடியே 33 இலட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன கால்நடை கொட்டகை, பசுமாடு கொட்டகை, நடைபாதை மற்றும் மேல்நிலை நீர் சேமிப்பு தொட்டி என பல துறைகள் சார்பில் மொத்தம், 309 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4127 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 5,428 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், சமூக பாதுகாப்புத் திட்டத்தில் 4645 பயனாளிகளுக்கு உதவிகள், பழங்குடியின மக்களுக்கு வீடுகள், ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கு வரவேற்பு பெட்டகங்கள், திருப்பனந்தாள் ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிக்கு கட்டில்கள்,  தாட்கோ சார்பில், 5334 பயனாளிகளுக்கு ஆழ்துளை கிணறு, தூய்மை பணியாளர் நலவாரிய அட்டைகள், தையல் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பவர் டில்லர், லோடு வாகனங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை சார்பில் 1,858 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள், இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை, இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்புத்தொகை என பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 558 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பில் 2,25,383 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை  முதலமைச்சர்  வழங்கினார்.

விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன்,  பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா,  கல்யாண சுந்தரம், முரசொலி, சுதா, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, அன்பழகன், அசோக்குமார். தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தாட்கோ தலைவர் இளையராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.