வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி,  அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 64.90% வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணை நாளை (டிசம்பர் 21 ஆம் தேதி) காலை 10:30 -க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


வழக்கு விவரம்: 


2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.75 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.


முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பல கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில்,  அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு நாளன்று அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் நேரில் ஆஜரானார்கள். அப்போது போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இருவரையும் விடுதலை செய்வதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்: 


இந்த தீர்ப்பை எதிர்த்து 2017 ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் விடுதலை செய்வதாக கூறிய விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், தண்டனை விவரங்களை தெரிவிப்பதற்காக இந்த வழக்கின் விசாரணை வரும் 21 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் அல்லது காணொலி மூலமாக ஆஜராக நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். நாளை அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரது துறை வேறு அமைச்சருக்கு அல்லது புதிய அமைச்சருக்கு வழங்கப்படும். 


TN Rain Alert: தூத்துக்குடி, நெல்லையில் மழை தொடருமா? சென்னையில் மழை இருக்குமா? வெதர்மேன் முக்கிய ரிப்போர்ட்..


CM Stalin Delhi: ”நாளை தூத்துக்குடி,நெல்லை, செல்கிறேன்.. கணிப்பை விட அதிக மழை” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி