குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக இந்த மாவட்டங்கள் முழுவதும் நீரில் மூழ்கியது என்றே சொல்லலாம். அப்படி அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்தது.
இந்நிலையில் இன்றும் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அளவு மழை பதிவானது. எதிர்ப்பாராத மழை காரணமாக மக்கள் ஸ்தம்பித்து போனார்கள். ரயில் சேவை, பேருந்து சேவை என அனைத்து போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் பயணிகள் சிக்கியுள்ள நிலையில் அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் பயணிகள் மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும், மீட்கப்பட்ட பயணிகள் உடனடியாக சென்னை வரும் வகையில் வாஞ்சி மணியாச்சி முதல் சென்னை வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தென்னக ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கும் நிலையில் மழை தொடருமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் (தனியார் வானிலை ஆய்வாளர்) பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், “ குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த வளி மண்டல சுழற்சி தற்போது அரபிக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து சென்றுள்ளதாகவும், இனி மழை படிப்படியாக குறையும். அதேபோல் சென்னையில் வரண்ட வானிலையே காணப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இது போன்ற மழை பெய்யும் என்றும் புயலோ, காற்றழுத்த தாழ்வு பகுதி இல்லாமல் வளிமண்டல சுழற்சியால் கிடைத்த மழை என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.