அதீத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டிஅதிக கனமழை பெய்தது. கிட்டதட்ட இரு மாவட்டங்களிலும் ஒரே நாளில் 660 செ.மீ., மழை பெய்ததால் அனைத்து இடங்களையும் வெள்ளம் சூழந்தது.
உடனடியாக தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணியில் தீவிரமாக களமிறங்கியது. தன்னார்வலர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையை பொறுத்தவரை தாமிரபரணி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள சந்திப்பு, கொக்கிரக்குளம், கோபால சமுத்திரம், சேரன்மகாதேவி,அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதேபோல் பாளையம் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் வடக்கு பைபாஸ் சாலைகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.
அதேசமயம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள காயல்பட்டினம் பகுதிதான் இந்த பெருமழையில் அதிக அளவு மழைப்பொழிவு அதிகம் பதிவான இடமாக மாறியது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 95 செமீ மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மேலும் எதிர்பாராத கனமழை, வெள்ளப்பெருக்கால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
மீளத் தொடங்கும் நெல்லை, தூத்துக்குடி
இதனிடையே இரண்டு நாட்களுக்குப் பிறகு நெல்லை, தூத்துக்குடியில் மழையின் அளவு குறைய தொடங்கியுள்ளது. முழுவதுமாக இல்லாவிட்டாலும் பெரிய அளவில் மழை இல்லாத நிலையில் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள வடிநீர் வடியத் தொடங்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது. வெள்ளம் சூழந்த பகுதியில் பைபர் படகு செல்ல முடியாத நிலையில் ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்கும் பணியும், உணவுப் பொருட்கள் வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும் அணைகளில் இருந்து நீர் திறப்பின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. கிட்டதட்ட 7 அடி உயரத்துக்கு நீரின் அளவு குறைந்துள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள் நெல்லை, தூத்துக்குடியில் முகாமிட்டு நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். வெள்ளம் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் அரசு தங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.