தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் 500 பயணிகள் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி வெள்ளத்தில் மிதந்து வருகிறது. இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் தென் மாவட்டங்களுக்கு சென்ற ரயில்கள் பாதி வழியிலியே நிறுத்தப்பட்டது. குறிப்பாக கோவில்பட்டி, திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது. இப்படியான நிலையில் நேற்று முன் தினம்
திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பியது. ஆனால் அந்த ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வருவதற்குள் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து விட்டதால் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திலேயே அந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது. எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் என்னவென்று தெரியாமல் விழித்தனர். ஆனால் நேரம் சென்றதே தவிர ரயில் அங்கிருந்து புறப்பட்டதாக தெரியவில்லை.
மேலும் திருச்செந்தூர் ரயில் நிலையத்தை தண்ணீர் சூழந்ததால் ரயிலை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையங்களுக்கு இடையே 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளத்தில் இருந்த சரளை கற்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக களம் கண்டது. முதற்கட்டமாக உள்ளே சிக்கியிருக்கும் 500 பயணிகளுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவை ராணுவ ஹெலிகாப்டன் மூலமாக வழங்கப்பட்டது. தண்ணீர் தேசமாக மாறியுள்ளதால் சாலை மார்க்கமாக உள்ளே செல்ல முடியவில்லை.
இதனால் 2 நாட்களுக்கும் மேலாக பயணிகள் உள்ளே சிக்கி தவித்து வரும் நிலையில் கீழே இறங்க முடியாத அளவுக்கு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் 3வது நாளாக ரயிலுக்குள் சிக்கியுள்ள பணியானது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கர்ப்பிணி, முதியவர்கள்,சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இவர்களை அழைத்துச் செல்ல 13 பேருந்துகள் தயார் நிலையில் உள்ளது.
ரயில் பயணிகள் அனைவரும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.