பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் எச்.ராஜா. சர்ச்சை பேச்சு, சர்ச்சை கருத்துக்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், தி.மு.க. எம்.பி. கனிமொழி பற்றி தரக்குறைவாக இவர் பேசியபோது இவருக்கு கடும் கண்டனங்களும், இவரை கைது செய்ய வேண்டும் என்ற கோஷங்களும் வலுவாக எழுந்தது. பல்வேறு காவல் நிலையங்களில் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


எச்.ராஜா மீதான வழக்கு:


இந்த நிலையில், பல்வேறு காவல் நிலையங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த 11 வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா மனுத்தாக்கல் செய்திருந்தார்.




அவரது மனுவில் அறிநிலையத்துறை அதிகாரிகளின் புகார்கள் செவி வழி செய்தி, அதற்கு ஆதாரம் இல்லை எனவும், பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டதற்கு ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை, கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்பதால் மூன்றாம் நபர் அளித்த புகாரின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக எச்.ராஜா மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தள்ளுபடி செய்ய மறுப்பு:


அவரது மனுவிற்கு பதில்மனு தாக்கல் செய்திருந்த காவல்துறை "இவ்வாறு எச். ராஜா பேசுவது முதல் முறை அல்ல. அவருடைய பேச்சு தனிப்பட்ட நபர்களை மட்டுமல்லாமல், அனைவரையும் பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பேசியுள்ளதால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்று தெரிவித்திருந்தது. இதனால், வழக்குகளை ரத்து செய்யக்கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்தது.


இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சிவகாசி, கரூர், ஊட்டி மற்றும் திருவாரூர் காவல் நிலையங்களில் அறநிலையத்துறை அதிகாரிகளின் குடும்பத்திற்கு எதிராக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் முதல் தகவல் அறிக்கையிலே இருப்பதால் அந்த 4 வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டார்.


3 மாதத்தில் முடிக்க உத்தரவு:




அதேசமயம், அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்பாக அவதூறாக பேசிய விவகாரத்தில் இருக்கன்குடி, விருதுநகர், ஈரோட்டில் பதிவு செய்த வழக்குகளின் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் அதை ரத்து செய்ய மறுத்துவிட்டார். மேலும், பெரியார் சிலை உடைப்பு குறித்து பேசிய கருத்து தொடர்பான வழக்கையும், கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்கையும் தள்ளுபடி செய்யவும் முடியாது என்று உத்தரவிட்டார்.


அறநிலையத்துறை அதிகாரிகள் தொடர்பான அவதூறு வழக்கை ஈரோடு நீதிமன்றத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். பெரியார் சிலை உடைப்பு தொடர்பான 3 வழக்குகளையும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கும், கனிமொழி குறித்த அவதூறு பேச்சு தொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியும் உத்தரவிட்டார். மாற்றப்பட்ட வழக்குகள் அனைத்தையும் 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மேலும் படிக்க:  Rajinikanth: கடந்து வந்த பாதைய மறக்க மாட்டேன்.... கண்டக்டராக பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்த ரஜினி!


மேலும் படிக்க: சென்னை பீச் ரயில்களை மேல்மருவத்தூர் வரை இயக்க வேண்டும் ; பயணிகளின் கோரிக்கைக்கு தென்னக ரயில்வே செவி சாய்க்குமா..?