பெங்களூருவில் தான் பணியாற்றிய ஜெயநகர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென வருகை தந்தது அங்கிருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


பேருந்து நடத்துநர் முதல் உச்ச நடிகர் வரை..


பெங்களூருவில் ஒரு சாதாரண பேருந்து நடத்துநராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, இன்று உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.


கர்நாடக மாநிலம், பெங்களூருவில் பிறந்த ரஜினிகாந்த், முதலில் கண்டக்டராக அங்கு பணிபுரிந்து வந்த நிலையில், தன் 26ஆம் வயதில் திரைத்துறையில் வாய்ப்பு தேடி சென்னை வந்தார்.


தொடர்ந்து மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து மேடை நாடகங்களின் நடித்து வந்த ரஜினிகாந்த், தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.பாலச்சந்தரால் அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் 1975ஆம் ஆண்டு அறிமுகமானார்.


தன் வழிகாட்டி, குருவாக பாலச்சந்தரை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த், பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், மகேந்திரன் உள்ளிட்ட சிறந்த இயக்குநர்களுடன் கைக்கோர்த்து, சினிமா துறையில் படிப்படியாக வளர்ந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை 80களின் பிற்பகுதியில் எட்டிப் பிடித்தார்.


நியாபகம் வருதே...


இன்று தமிழ் சினிமா, இந்திய சினிமா துறை ஆகியவற்றைத் தாண்டி, தன் நடிப்பு, ஸ்டைல் ஆகியவற்றால் உலக அரங்கில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கட்டிப்போட்டு உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார்.


இந்நிலையில், தான் 70களில் நடத்துநராகப் பணியாற்றிய பெங்களூர் பேருந்து பணிமனைக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீர் விசிட் அடித்துள்ளார்.


தன் கரியரின் தொடக்க கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகையில் பெங்களூர் பேருந்து பணிமனைக்கு விசிட் அடித்த ரஜினி, அங்கிருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடி, அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். 


 






இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரவேற்ப்பைப் பெற்று வருகின்றன.


நெட்டிசன்களின் கோபத்துக்கு ஆளான ரஜினி..


சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து கோலிவுட்டில் அதிகம் வசூலித்த திரைப்படமாக சாதனை படைத்துள்ளது. 525 கோடிகளுக்கும் மேல் வசூலை இப்படம் குவித்து கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை அடித்து நொறுக்கி வருகிறது.


ஆனால் மற்றொருபுறம் ஜெயிலர் பட வெளியீட்டின்போது ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட ரஜினி, அதன் ஒருபகுதியாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது சர்ச்சைக்குள்ளானது. இந்த சந்திப்பின்போது தன்னைவிட சுமார் 20 வயது இளையவரான யோகி ஆதித்யநாத்தின் கால்களைத் தொட்டு கும்பிட்டார்.


ரஜினியின் இந்த செயல் இணையத்தில் கடும் கண்டனங்களைப் பெற்ற நிலையில், யோகிகளை சந்திக்கும்போது அவர்களது கால்களில் விழுந்து வணங்குவது தன் வழக்கம் என சென்னை திரும்பிய ரஜினிகாந்த் விளக்கமளித்தார். 


மேலும் உத்தரப் பிரதேசத்தில் ஐபிஎஸ் அதிகாரி கொலை வழக்கு உள்பட பல்வேறு கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எல்.ஏ ரகுராஜ் பிரதாப் சிங் எனப்படும் ராஜா பையாவை சந்தித்ததும் இணையத்தில் பெரும் கண்டனங்களைக் குவித்தது.


இந்த சர்ச்சைகள் சற்றே ஓய்ந்துள்ள நிலையில் தற்போது பெங்களூருவில் தான் பணியாற்றிய பேருந்து பணிமனைக்கு ரஜினி திடீர் விசிட் அடித்து மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளார்.