Lok Sabha Election: நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. 


ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை:


உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது இந்தியா. 17வது மக்களவையின் பதவிக் காலம்  வரும்  ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை அடுத்து, 18வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  ஒவ்வொரு தேர்தலுக்கு வாக்கு சதவீதம் என்பது 100 சதவீதத்தை எட்டுவதில்லை.


அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டிய நிலையில், 30 முதல் 35 சதவீதம் வரை வாக்களிக்காமல் இருக்கின்றனர். இதை கருத்தில் கொண்டே தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படியே, 18வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.


ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறையை அறிவித்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை  அரசாணை வெளியிட்டது.  மருத்துவமனை, காவல்நிலையம், தீயணைப்பு துறை, பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை தவிர்த்து மற்றவர்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது.  


முதல்கட்ட தேர்தல்:


முதல்கட்டமாக தமிழ்நாடு (39), புதுச்சேரி (1), அருணாச்சல பிரதேசம் (2), பீகார் (4), அசாம் (5),  மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (2), மேகாலயா (2), மிசோரம் (1), நாகாலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), திரிபுரா (1), உத்தர பிரதேசம் (8), உத்தர காண்ட் (5), மேற்கு வங்கம் (3), அந்தமான் நிக்கோபர் (1), ஜம்மு காஷ்மீர் (1), லட்சத்தீவுகள் (1) ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19 அன்று தேர்தல் நடைபெறுகிறது. 


தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி:


தமிழ்நாட்டில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, பாஜக தலைமையில் மூன்று அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. ஏற்கனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்  செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டனர்.  வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான பிறகு தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 38 தொகுதிகளில் வென்றது. அதிமுக ஒரு தொகுதியில் மட்டும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


புது சர்ச்சை! அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அ.தி.மு.க., நாம் தமிழர் கோரிக்கை - ஏன்?


Lok Sabha Elections 2024: எதிரணியில் இருப்பதால் சின்னம் கொடுக்க மறுக்கிறார்கள் - திருமாவளவன்