மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின் ஏற்கப்பட்டுள்ளது. 


வேட்புமனுத் தாக்கல்:


மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சிகள் தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று மாலை 3 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளில் சுமார் 1403 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மார்ச் 25 ஆம் தேதி பங்குனி உத்திரம் என்பதால் பெரும்பாலான கட்சி வேட்பாளர்கள் அன்றைய தினம் வேட்பமனு தாக்கல் செய்தனர். நேற்று கடைசி நாள் என்பதால் தாக்கல் செய்யாத கட்சி உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செயதனர்.


ஆ.ராசா மனு நிறுத்திவைப்பு:


இந்நிலையில் இன்று வேட்பாளர் மனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரிகள் வேட்புமனு மீது பரிசீலனை செய்து ஆவணங்களை சரிபார்த்து மனு ஏற்கப்படும். அந்த வகையில் நீலகிரி தொகுதியில் திமுக தரப்பில் போட்டியிடும் ஆ. ராசாவின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. அதேசமயம், நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல் முருகனின் வேட்பு மனு மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 


ஏற்பு:


நீலகிரி தொகுதியில் மொத்தம் 33 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக வேட்பாளர் ஆ.ராசா சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் சில பிழைகள் உள்ளதாக கருத்துக்கள் எழுந்த நிலையில், அவரது வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் அதனை சரிபார்த்து வேட்பமனு ஏற்கப்படும் என தகவல்கள் வெளியானது.


நீலகிரி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு நிறுத்தி வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் மனு ஏற்கப்பட்டுள்ளது.  அதேபோல், கோவை மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மனு ஏற்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டதிலும் அமமுக கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க.வினரே தங்களது தினகரனின் பிரமாணப் பத்திரத்தை ஒரு முறை சரிபார்க்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்ட காரணத்தால் அவரது மனு காலதாமதத்திற்கு பிறகு ஏற்கப்பட்டது.