விழுப்புரம்: எதிரணியில் இருப்பதால் சின்னம் கொடுக்க மறுக்கிறார்கள். இறுதி நேரத்தில் சின்ன மாறும் என யாரும் குழப்பம் அடைய வேண்டாம். நமது சின்னம் பானை தான் என விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் திருமாவளவன் பேசினார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நாட்டையும் மக்களையும் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியலமைப்புச் சட்டத்தையும் காப்பாற்றுவதற்கு ஒட்டு மொத்த இந்திய மக்களும் நடத்துகிற ஒரு யுத்தம் தான் இந்த தேர்தல். இது காங்கிரசுக்கும் பிஜேபிக்கு நடக்கும் யுத்தம். தேர்தல் அல்ல. அதிமுக, திமுக, பாஜக இடையே நடக்கும் தேர்தல் அல்ல. இது ஒரு விடுதலைப் போர். இந்தியா முழுமைக்கும் உள்ள ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டி இந்தியா என்ற கூட்டணியை மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். அரசியல் எதிரியாகவோ கொள்கை எதிரியாகவோ அதிமுக இல்லை.
அகில இந்திய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும். மோடிக்கும், அமித் ஷாவுக்கும் நெருங்கிய கூட்டாளியான அம்பானியும் அதனியும் வளர்ச்சி அடைந்துள்ளனர். பாஜக ஆட்சி என்பது மக்களுக்கானது அல்ல சாதாரண மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்து கொள்ளையடிக்கும் ஆட்சி தான் பாஜக ஆட்சி. அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் ஆட்சி மோடி ஆட்சி அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய துடித்துக் கொண்டிருக்கிறது மோடி ஆட்சி.
மோடி தமிழகம் வரும்போது பொன்முடி மேடையில் இருக்கக் கூடாது என அவர் பதவியை பறித்து சதி செய்தது எல்லாம் ஆர்எஸ்எஸ் கும்பல் தான். அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் எல்லோரும் அவர்களை எதிர்க்கிறார்கள் என்பதுதான். சட்டபூர்வமாக போராடி மீண்டும் அமைச்சர் பதவி பெற்றுள்ளார் பொன்முடி.
பாஜகவுடன் கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனுக்கு விண்ணப்பித்த மூன்று மணி நேரத்திலேயே குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. ஜி.கே.வாசனே மறந்த சைக்கிள் சின்னத்தை உடனே வழங்கப்பட்டு விட்டது . ஆனால் எதிரணியில் இருப்பதால் மதிமுகவுக்கும் சின்னம் இல்லை விசிகாவுக்கும் சின்னம் இல்லை தர மறுக்கிறார்கள். ஆனால் நம் சின்னம் பானை சின்னம் தான் . கடைசி நேரத்தில் சின்ன மாறும் என யாரும் குழம்ப வேண்டாம்.
பிஜேபியை எதிர்ப்பவர்களை ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். கலைஞர், ஜெயலலிதா இல்லாத நேரத்தில் எப்படியும் தமிழ்நாட்டில் காலூன்றி விடலாம் என நினைக்கிறார்கள் . அரசியல் காமெடியன் அண்ணாமலை. தொடர்ந்து திமுகவுக்கு எதிராக கருத்து சொல்லி வருகிறார். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள். திமுக கடந்தமுறை வழங்கிய தொகுதிகளை அப்படியே மீண்டும் வழங்கி இருக்கிறது. எதிரணியில் உள்ளவர்கள் கூட்டணியாக கூட இல்லை சிதறி கிடக்கிறார். திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.