கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட மொத்தம் 59 வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணை இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது மொத்தம் 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலையின் வேட்பு மனுவை முறைப்படி தாக்கல் செய்யவில்லை என்பதால், அதனை நிராகரிக்க வேண்டும் என அ.தி.மு.க., நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வலியுறுத்தினர்.


அண்ணாமலையின் வேட்பு மனுவில் படிவம் 26 ல் வேட்பாளரின் குற்றப்பின்னணி வரிசைப்படுத்தவில்லை எனவும், வேட்பாளரின் வாக்கு செலுத்தும் இடமானது முறையாக குறிப்பிடவில்லை எனவும் கூறி அவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அந்த எதிர்ப்பையும் மீறி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்பு மனுவை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.


புது சர்ச்சை


இந்த நிலையில் அண்ணாமலை நீதிமன்றங்களுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய முத்திரைத்தாளில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக புது சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரான கிராந்திகுமார்பாடியிடம் அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர். அப்போது விதிமுறைகளை மீறி வேட்பு மனுத்தாக்கல் செய்த அண்ணாமலையின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். 


இது குறித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறுகையில், “அண்ணாமலை வேட்புமனு மீது நிறைய பிரச்சனைகள் உள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரி மிகப்பெரிய தவறு செய்துள்ளனர். அண்ணாமலையின் பிரமாண பத்திரம் நீதிமன்றங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் முத்திரை தாளில் கொடுத்துள்ளார். இது முற்றிலும் தவறு. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இதையெல்லாம் கவனிக்காமல் ஏற்றுக் கொண்டுள்ளது தவறு.




சுயேச்சை வேட்பாளர்களுக்கு கமா இல்லை, புள்ளி இல்லை என வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனு பரிசீலனையின்போது நாங்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்கவில்லை. ஒருதலைப் பட்சமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் கூட , அந்த வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கூடும். அண்ணாமலைக்கு போடக்கூடிய வாக்குகள் வீண் தான். தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்பட வேண்டும். நடுநிலையாக செயல்படக்கூடிய அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். இந்திய தேர்தல் வரலாற்றில் இதுபோன்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. படிக்காதவர்கள் கூட இது போன்ற தவறுகளை செய்ததில்லை. அண்ணாமலை வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


நாம் தமிழர் புகார்




நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் விஜயராகவன் கூறுகையில், ”நீதிமன்றங்களில் மட்டுமே பயன்படுத்தும் முத்திரைத்தாளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது சட்டப்படி தவறு. அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒருவேளை அண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டாலும், அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. இது முழுக்க முழுக்க வேட்பாளரின் தவறு.


அதனை தேர்தல் அதிகாரிகள் சரி பார்க்காமல் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அந்த முத்திரைத்தாளை வழக்கு தாக்கல் செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டும். வேறு எதற்கும் பயன்படுத்த கூடாது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்தார். அண்னாமலையின் வேட்பு மனு குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நீதிமன்ற பயன்பாட்டிற்கு அல்லாத முத்திரைத்தாளில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக ஒரு வேட்பு மனு நகலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.