முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்ட புகாரில் கிஷோர் கே.சுவாமி கைது செய்யப்பட்டார். 


வலதுசாரி சிந்தனையாளரான கிஷோர் கே.சுவாமி பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதள பக்கங்களில் எம்பி, எம்எல்ஏ தலைவர்கள் பற்றி அவதூறு பேசுவதை வாடிக்கையாக கொண்டவர். மற்றவர்களை மட்டம் தட்டி டுவீட் போடுவது, பேஸ்புக்கில் போஸ்ட் போடுவதை வழக்கமாக செய்து வந்துள்ளார். பெண்கள் குறித்து மிகவும் மோசமாகவும் பதிவிட்டு வந்துள்ளார்.


இந்நிலையில், சமூக வலைதளத்தில் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சுவாமி மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். திமுக ஐடி பிரிவு சார்பில் அளித்த புகாரில் சங்கர் நகர் போலீசார் அவரை கைது செய்தனர்.




153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய பிரிவின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.  பெண் பத்திரிகையாளர்களை பற்றி அவதூறாக பேசியதாக ஏற்கெனவே கிஷோர் கே சுவாமி மீது வழக்கு உள்ளது. அது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.


முதல்வர்கள் குறித்து அவதூறு  கருத்து பதிவிட்டதுதொடர்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான கிஷோர் கே சுவாமியை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  


Youtuber Madan Update : அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்!


இதனையடுத்து கைது செய்யப்பட்ட கிஷோர் கே சுவாமி செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், கொரோனா சோதனைக்கு பின் அவர் மத்திய சிறைக்கு மாற்றப்படுவார் என்று போலீசார் தரப்பில்  கூறப்பட்டுள்ளது. கிஷோர் கே சுவாமி கைதுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலர் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இவரைபோன்று கருத்து தெரிவிக்கும் மற்றவர்களையும் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!