பெண் காவலர்களை இனி சாலைப்பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள முதல்வருக்கு,


குடும்பப் பெண்களுக்கான உரிமைத்தொகை அறிவிப்பு தொடங்கி மகளிர் உரிமைத்துறை என துறையின் பெயர் மாற்றியது உட்பட உங்கள் நிர்வாகத்தில் மகளிர் நலன் என்பது பிறப்புரிமை என பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளீர்கள். அந்த வரிசையில் பெண் காவலர்கள் எங்களைச் சாலைப்பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம் எனத் தற்போது அறிவுறுத்தியுள்ளீர்கள். பல மாற்றங்களுக்கான சிறுதொடக்கமாக இது இருக்கும் என்கிற நம்பிக்கையில் பெண் காவலர்கள் சார்பாக நன்றி.




ஆனால் காக்கிச்சட்டைக்குள் இருந்தாலும் பாதுகாவலர்களாகப் பார்க்காமல் பெண்ணாக மட்டுமே பார்க்கும் சமூகத்தில் சாலைகளில் நிற்பது மட்டும் எங்களுடைய பிரச்னையல்ல முதல்வரே. சுயமரியாதை, பாலியல் சீண்டல்கள், அதிகாரிகளின் அழுத்தம் என அடுக்கடுக்காக இருக்கிறது எங்கள் மனக்குமுறல். அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மட்டுமல்ல ஆர்பாட்டங்களுக்கும் நாங்கள்தான் பாதுகாப்பாக நிற்கவேண்டும். ஆனால் எதிர்கட்சி,ஆளுங்கட்சி என எவ்வித வரையறையும் இல்லாமல் கோஷமிடும் கரைவேட்டிகளுக்கு நாங்கள் சீண்டல் செய்யும் பண்டம்.  ஆர்ப்பாட்டங்களில்தான் பாதுகாப்பில்லை என்றால் உயர் அதிகாரிகளின் அறைகளுக்குள் நிகழ்வதெல்லாம் தொண்டையைக் கவ்வியிருக்கும் ஆலகாலம் அளவிலான துன்பம். நாமக்கல் அதிகாரி விஷ்ணுப்ரியாவுக்கு நிகழ்ந்ததை தமிழ்நாடே உறைந்துபோய் பார்த்தது. ஆனால் காவல்துறை முழுக்க ஆயிரமாயிரம் விஷ்ணுப்ரியாக்கள் இருக்கிறார்கள். அவர்களின் துயர் துடைக்க என்ன செய்யப்போகிறீர்கள்?


’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்பதுபோல ‘எங்கள் காவல்நிலையங்களில் முதலமைச்சர்’ தேவை. சீருடை இறுக்கமாக இருந்தால் ஏற்ற இறக்கமாகப் பார்ப்பது, எதிர்பேச்சு பேசிவிட்டால் எங்கள் பணிக்காலம் முழுக்க பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது, போராட்டங்களுக்கு..கூட்டங்களுக்கு...என எதற்குப் பாதுகாப்புக்குச் சென்றாலும் உணவின்றி உறங்க இடமின்றி பட்டினியும் பரிதாபமுமாக வீடு திரும்புவது, சில நேரங்களில் பாதுகாப்புப் பணியின்போதே வெப்பம் தாங்காமல் உயிர் பறிபோவது என நாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களின் பட்டியல் மிகநீளம். ஒரு ஆண் போலீஸ் என்றால் அவர் போலீஸ் மட்டும்தான் ஆனால் ஒரு பெண் போலீஸ் என்றால் அவர் போலீஸ் மட்டுமல்ல, தன் குடும்பத்தையும் பராமரித்து சமூகத்தையும் பாதுகாத்து தினசரியும் டபுள் ஆக்‌ஷன் ஹீரோவாகவே வலம்வர வேண்டியிருக்கிறது. இத்தனைக்குமிடையே நாங்கள் கேட்பது சாலையில் நிற்கவேண்டாம் என்பது போன்ற தனிச்சலுகைகள் அல்ல, உச்சிவெயிலில் நின்றாலும் குறைந்தபட்சம் குடிப்பதற்கான நீர் வசதி, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கான அடிப்படை வசதிகள் என எங்களை நாங்களே பார்த்துக்கொள்ளத் தேவையான உரிய வசதிகளைத்தான் செய்துதரக் கேட்கிறோம். மற்றபடி வெயிலில் ஒருவரால் எவ்வளவு நேரம் நிற்கமுடியும் என்பது பாலினம் சார்ந்தது அல்ல, ஒருவரது உடல்நிலை
சார்ந்தது அதன்படி எங்களுடன் காவலுக்கு நிற்கும் ஆண்காவலர்களுக்கும் இந்த உரிமைகளை நீட்டிக்கக் கேட்கிறோம். 


காவல்துறை உங்கள் நண்பன் என்பது பெயரளவில் மட்டும்தான். இந்தச் சமூகம் எங்களை நண்பனாக நடத்துவதில்லை என்பதே நிதர்சனம்.  பெண் எனச் சலுகைகள் கேட்கவில்லை நாங்கள்,  பெண்கள் நம் கண்கள் என்கிற பெயரில்  பாலின பேதம் வேண்டாம். காவலர் என்கிற  கண்ணியம் எங்களுக்குக் கிடைத்தாலே போதும். செய்வீர்களா? 

Also Read: அத்துமீறல், ஆபாசம், பப்ஜி : மதனை விசாரணைக்கு ஆஜராக சைபர் பிரிவு போலீஸ் சம்மன்!