Cauvery Water Issue: டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். 


காவிரியில் இருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் வரையில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா தர வேண்டும். ஆனால், 3 டி.எம்.சி. தண்ணீர்தான் வழங்கியுள்ளதாக தெரிகிறது.  


காவிரி மேலாண்மை கூட்டம்: 


இந்நிலையில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது கூட்டம் இன்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமை வகிக்கும் நிலையில், தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 38 டி.எம்.சி தண்ணீரை உடனே திறக்க தமிழக அரசு வலியுறுத்தியது.  கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். 


தண்ணீர் தர மறுத்த கர்நாடகம்:


பின்னர், செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறுகையில், "தமிழகத்தில் கடந்த 9ஆம் தேதி நிலவரப்படி 37.9 டி.எம்.சி. தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த விஷயத்தை வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  இந்த கூட்டத்திலும், தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து வெளியேறினோம். கடந்த 9ஆம் தேதி வரை 37.9 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டும். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை" என்றார்.




மேலும் படிக்க 


Archakas Appointment: அர்ச்சகர் நியமனம் ரத்து உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி தடை


இந்திய சட்டங்களுக்கு இந்தியில் பெயரா? மொழி சர்வாதிகாரம் என கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்