அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணையின்படி நியமனம் செய்யப்பட்ட அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


"அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்"


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பிரபு, ஜெயபாலன் ஆகியோரின் பணி நியமனங்களை
விசாரணை நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் ரத்து செய்திருந்தார். இந்த பணி நியமன ரத்து உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்  என அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதில் தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையின் அடிப்படையில், ஸ்ரீரங்கம், குமாரவயலூர், சுப்ரமணியசுவாமி கோயிலில் நியமனம் செய்யப்பட்ட  பிரபு, ஜெயபாலன் ஆகியோரின் நியமனங்களை ரத்து செய்து, நீண்ட காலமாக பணியாற்றி வரும் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகிய தங்களை அர்ச்சகர்களாக நியமிக்க உத்தரவிட கோரி  வழக்கு தொடரப்பட்டது.


தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:


இந்த வழக்கை விசாரணை செய்த தனி நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன், "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் நியமனம் செய்யப்பட்ட இரண்டு அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்தும் ஆகம விதிக்கு முரணாக, குமாரவயலூர் கோவிலில் அர்ச்கர் நியமிக்கப்பட்டுள்ளார்" என்று உத்தரவு பிறப்பித்தார்.


மேலும், இந்த கோயிலில் அர்ச்சகர்களாக (ஐயர்கள்) பல ஆண்டுகளாக பணியாற்றியவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.


தனி நீதிபதியின் உத்தரவுக்கு அதிரடி தடை:


இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை செயலர் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


சமீபத்தில், அர்ச்சகர் நியமனம் குறித்து அதிரடி கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், "அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்த பங்கும் இல்லை. யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது" என உத்தரவிட்டது.